சேலத்தில்அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.54 லட்சம் மோசடி செய்தவர் கைதுமற்றொருவருக்கு வலைவீச்சு


சேலத்தில்அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.54 லட்சம் மோசடி செய்தவர் கைதுமற்றொருவருக்கு வலைவீச்சு
x
சேலம்

சேலம்

சேலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.54 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

அரசு வேலை

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்குட்பட்ட தெற்கு உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவருடைய மகன் விஜி (வயது 30). இவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவில் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மேட்டூரை சேர்ந்த மகேஷ்குமாருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் முகமது பாசில் (28) என்பவர் நன்கு தெரியும். அவரிடம் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித்தருவார் என்றும், அவ்வாறு பலருக்கு அவர் அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளார் என்று கூறினார்.

போலி நியமன ஆணை

அதை நம்பி நான் மேட்டூரில் வைத்து மகேஷ்குமார், முகமது பாசில் ஆகிய 2 பேரிடம் கடந்த ஜனவரி மாதம் 23-ந்தேதி ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்தேன். அப்போது அவர்கள் கிராம உதவியாளர் பணி நியமன ஆணை என்றும், கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று வேலைக்கு சேர்ந்து கொள்ளவும் என்று ஒரு கடிதம் கொடுத்தனர். அந்த கடிதத்தை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த போது அது போலி பணி நியமன ஆணை என்பது தெரிந்தது.

எனவே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் சேர்ந்து இதுவரை 15 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.54 லட்சம் மோசடி செய்து இருப்பதும், கலெக்டர் அலுவலத்தில் முகமது பாசில் வேலை பார்க்கவில்லை என்றும் தெரிந்தது. இதையடுத்து மகேஷ்குமார், பாசில் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.

கைது

இந்த நிலையில் முகமது பாசில் சென்னை வடபழனியில் பதுங்கி இருப்பதாக கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சென்னை சென்றனர். பின்னர் அவர்கள் சென்னை வடபழனி பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த முகமது பாசிலை கைது செய்து நேற்று சேலத்திற்கு அழைத்து வந்தனர். இந்த மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள மகேஷ்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story