குற்ற செயல்களில் ஈடுபட்ட 7 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனிப்படை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி குற்ற செயல்களில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்தனர்.
தனிப்படை அமைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கள்ளச்சந்தையில் மது விற்பனை, லாட்டரி உள்ளிட்டவை விற்பனை நடந்து வருவதாகவும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 29-ந் தேதி தினத்தந்தியில் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார். இதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர் உட்கோட்டங்களில் அதிரடியாக நேற்று சோதனை நடத்தினர்.
இதில் ஊத்தங்கரை காட்டேரி பஸ் நிறுத்தம் அருகில் மோட்டார்சைக்கிளில் வந்த நபரை சோதனை செய்த போது மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக அரூர் அருகே உள்ள சந்திரபுரத்தைச் சேர்ந்த தர்மன் (வயது37) எனபவரை போலீசார் கைது செய்தனர்.
குட்கா விற்றவர் கைது
நாகரசம்பட்டியில் தட்ரஅள்ளியில் மது விற்ற மஞ்சுநாதன் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் குட்கா விற்றதாக முருக்கம்பாறையை சேர்ந்த தாமோதரன் (51) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோன்று போச்சம்பள்ளி அருகே புதுமோட்டூரில் கடையில் குட்கா விற்ற சென்றான் (45), பாரூர் காளிப்பட்டியில் மது விற்ற ஜமுனா (41) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து குட்கா, மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மணல் கடத்தல்
கிருஷ்ணகிரி பழையபேட்டையில் லாட்டரி விற்ற நிஜாமுதின் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம் மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கிருஷ்ணகிரி டவுனில் மது விற்ற நூர்ஜான் (52) என்பவரை போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல காவேரிப்பட்டணம் சந்தாபுரம், நரிமேடு பகுதிகளில் மணல் கடத்தி வந்த 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மத்திகிரி அருகே பேளகொண்டப்பள்ளியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 12 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.