ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 6 பேர் கைது


ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 10 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-11T16:52:45+05:30)

நாகரசம்பட்டி அருகே இருதரப்பினர் இடையே நடந்த மோதல் தொடர்பாக சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி

நாகரசம்பட்டி அருகே இருதரப்பினர் இடையே நடந்த மோதல் தொடர்பாக சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராணுவ வீரர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே உள்ள வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 31). இதே பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (58). இவர் நாகோஜஅள்ளி பேரூராட்சி கவுன்சிலராக இருந்து வருகிறார். பிரபாகரனும், அவரது சகோதரர் பிரபு (28) என்பவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி பிரபாகரன் பொது குடிநீர் தொட்டி அருகில் துணி துவைத்து கொண்டு இருந்தார். அங்கு வந்த கவுன்சிலர் சின்னசாமி இது குறித்து கேட்டார். அப்போது அங்கு வந்த பிரபாகரனின் தாயாருக்கும், சின்னசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அன்று மாலை சின்னசாமி மற்றும் அவரது மகன்கள் குருசூர்யமூர்த்தி (27), குணாநிதி (19), ராஜபாண்டியன் (30) அங்கு வந்து பிரபாகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மோதல்

இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சின்னசாமி தரப்பினர் தாங்கள் வைத்திருந்த கத்தி, உருட்டு கட்டை மற்றும் இரும்பு கம்பியால் பிரபாகரன், அவரது தம்பி பிரபு மற்றும் தந்தை மாதையன் ஆகிய 3 பேரையும் சரமாரியாக தாக்கினர். இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் நாகரசம்பட்டி போலீசார் சின்னசாமி, குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டி (30), மற்றும் மணிகண்டன் (32), மாதையன் (60), புலிபாண்டி (24), வேடியப்பன் (55), காளியப்பன் (40) ஆகிய 9 பேர் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டி, மணிகண்டன், மாதையன், வேடியப்பன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

வழக்குப்பதிவு

கைதானவர்களில் குருசூர்யமூர்த்தி சென்னை மாநகரில் ஆயுதப்படை போலீசாக பணியாற்றி வருகிறார். குணாநிதி கல்லூரி மாணவர் ஆவார். அதே போல சின்னசாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ராணுவ வீரர்கள் பிரபாகரன், பிரபு மற்றும் 18 வயது மாணவர், முத்து (22), மாதையன் (60) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story