எல்பின் நிறுவன நிர்வாக இயக்குனர் கைது
எல்பின் நிறுவன நிர்வாக இயக்குனர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவந்த எல்பின் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் பண இரட்டிப்பு மற்றும் நிலம் தருவதாக விளம்பரப்படுத்தினர். இதனை நம்பி இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த பொதுமக்கள் பலர் ஏமாற்றப்பட்டனர்.இதையடுத்து பொதுமக்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பித்தராமல் ஏமாற்றிய எல்பின் நிறுவனம், ஸ்பேரோ குளோபல் டிரேட், வராகமுனி தனியார் நிறுவனம், ஜே.பி. ஓரியண்ட் நிறுவனம், ஆர்.எம். வெல்த் கிரியேஷன், இன்பினி கேலக்ஸி நிறுவனம், மற்றும் இதைச் சார்ந்த அறம் மக்கள் நல சங்கம் டிரஸ்ட், அறம் டி.வி. சேனல், தமிழ் ராஜ்ஜியம் செய்தித்தாள் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், பெரம்பலூர், கோவை, சென்னை ஆகிய 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மதுரை ஐகோர்ட்டு வழிகாட்டுதலின் பேரில் போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி அபின் தினேஷ் மொடக் உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன் கார்த்திக்குமார் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்குகளில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த எல்பின் நிறுவன நிர்வாக இயக்குனர் ரமேஷ்குமார் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர், தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து நீதிபதி உத்தரவின்பேரில், நிதி மோசடி வழக்கில் ரமேஷ்குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.