ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்தவர் கைது
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஆவின் நிறுவனத்தில் வேலை
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே நெட்டவேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகன் செந்தில்குமார். என்ஜினீயரான இவருக்கு மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் துணை மேலாளர் பணி 3 மாதத்தில் வாங்கி தருவதாக கூறி, அதே ஊரை சேர்ந்தவரும், செந்தில்குமாருக்கு தெரிந்தவருமான, அரியலூர் அரசு தொழில் பயிற்சி மையத்தில் ஸ்டோர் கீப்பராக பணிபுரிந்த அருண்குமார், அவருடைய நண்பர்களான திருச்சி காட்டூரை சேர்ந்த கலைச்செல்வன் மற்றும் கார்த்திக், ஆனந்தகுமார் ஆகியோர் ரூ.15 லட்சம் கேட்டுள்ளனர்.
தவறும் பட்சத்தில் அவர்கள் பணத்தை திருப்பி தருவதாகவும், மேலும் அருண்குமார் தனது தங்கை மற்றும் மைத்துனருக்கு கார்த்திக் மூலம் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கியதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
கொலை மிரட்டல்
இதனை நம்பிய செந்தில்குமார் முன்பணமாக ரூ.2½ லட்சத்தை கலைச்செல்வனின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். மேலும் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி ரூ.8½ லட்சத்தை அருண்குமாரிடம் ரொக்கமாக கொடுத்துள்ளார். மீதமுள்ள தொகையை பணியில் சேர்ந்த பின்பு அவர்கள் தருமாறு செந்தில்குமாரிடம் கூறியுள்ளனர். ஆனால் 3 மாதம் கழித்து பணி ஆணை வரவில்லை என்றும், பணத்தை திருப்பி தருமாறும் அருண்குமாரிடம் நேரிலும், செல்போன் மூலமாகவும் செந்தில்குமார் கேட்டபோது, பணத்தை திருப்பி தர முடியாது என்றும், பணத்தை திருப்பி கேட்டால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
அதனை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த செந்தில்குமார் இந்த சம்பவம் தொடர்பாக அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார், கலைச்செல்வன் உள்ளிட்டோரை தேடி வந்தனர்.
கைது
இந்த நிலையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில், குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) வெங்கடேசன் வழிகாட்டுதலின்படி, இன்ஸ்பெக்டர் குணமதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் அமரஜோதி, முருகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சேலம் மாவட்டம், சின்ன திருப்பதி சீனிவாச நகரில் பதுங்கியிருந்த கலைச்செல்வனை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அரியலூர் கிளை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அருண்குமார் உள்ளிட்டோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.