ரெயில்வே இணையதளத்தில் போலி கணக்கு தொடங்கி டிக்கெட் விற்றவர் கைது
ரெயில்வே இணையதளத்தில் போலி கணக்கு தொடங்கி டிக்கெட் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
சூரமங்கலம்:
ஜெராக்ஸ் கடையில் சோதனை
சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், திருப்பத்தூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஆன்லைனில் முறைகேடாக ரெயில் டிக்கெட்டை முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்று வருபவர்களை ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இதற்காக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் போலி ஐ.டி.களை உருவாக்கி முறைகேடாக டிக்கெட் முன்பதிவு செய்யும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பத்தூரில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில் ரெயில்வே பாதுகாப்பு படையின் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 4 பெயர்களில் போலியாக ஐ.ஆர்.சி.டி.சி. கணக்குகளை தொடங்கி ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து விற்கப்பட்டது தெரியவந்தது.
கைது
இதையடுத்து கடையின் உரிமையாளரான திருப்பத்தூர் அதியூர் பகுதியை சேர்ந்த தினேஷ்வரன் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்து முன்பதிவு டிக்கெட்டுகள் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த சோதனை பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.