தோஷம் கழிக்க வேண்டும் எனக்கூறி பெண்ணிடம் நகை அபேஸ் செய்ய முயன்றவர் கைது
தோஷம் கழிக்க வேண்டும் எனக்கூறி பெண்ணிடம் நகை அபேஸ் செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பள்ளக்காடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னப்பொண்ணு (வயது 60). இவர் நேற்று முன்தினம் ஆத்தூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் பெரியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (53) என்பவர் சின்னப்பொண்ணுவிடம் பேச்சு கொடுத்தார்.
உங்களுக்கு தோஷம் இருப்பதாகவும், அதனை கோவிலுக்கு சென்று கழிக்க வேண்டும் என கூறினார். மேலும் நீங்கள் அணிந்திருக்கும் நகைகளை கழட்டி கொடுக்க வேண்டும் என்றும், தோஷம் கழித்த பின்னர் நகைகளை திரும்ப கொடுப்பேன் என்றாராம்.
இதனை நம்பாத சின்ன பொண்ணு சத்தம் போட்டார். அப்போது சுரேஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். எனினும் பஸ் நிலையத்தில் இருந்த சக பயணிகள் சுரேஷ்குமாரை பிடித்து தர்மஅடி கொடுத்து ஆத்தூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரித்ததில் சுரேஷ்குமார் பல்வேறு இடங்களில் தனியாக இருக்கும் பெண்களிடம் நைசாக பேச்சு கொடுத்து தோஷம் கழிப்பதாக கூறி நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் அவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர்.