கணவர் கொலையில் கைதானவர்: ஜாமீனில் வந்த இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு


கணவர் கொலையில் கைதானவர்: ஜாமீனில் வந்த இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
x

நெல்லையில் கணவர் கொலையில் கைதாகி ஜாமீனில் வந்த இளம்பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் குழந்தையை கேட்டதால், அவரது தம்பியே இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்.

திருநெல்வேலி

நெல்லை பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் ஜெயஜோதிநகரைச் சேர்ந்தவர் சமுத்திரவேல். இவருடைய மனைவி மாலா. இவர்களுடைய மகள் கோமதி (வயது 24). இவருக்கும், உறவினரான ராஜபாளையத்தைச் சேர்ந்த சங்கருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் சென்னையில் வசித்து வந்த இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த ஆண்டு சங்கரை மர்மநபர்கள் கொலை செய்தனர். இதுகுறித்து சென்னை கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக சங்கரின் மனைவி கோமதி உள்ளிட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவரது மூத்த மகனை சங்கரின் பெற்றோரும், இளைய மகனை கோமதியின் பெற்றோரும் வளர்த்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த கோமதி, பின்னர் பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தில் உள்ள பெற்றோரின் வீட்டில் ஒரு மாதம் தங்கினார். பின்னர் அவர் தனது குழந்தையை தன்னுடன் அனுப்புமாறு பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். இதையடுத்து கோமதி மட்டும் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

நேற்று காலையில் கோமதி தனது வக்கீலுடன் பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு வந்தார். அவர் தனது குழந்தையை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு பெற்றோரிடம் மீண்டும் கேட்டார். இதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த கோமதியின் தம்பியான 17 வயது சிறுவன் அரிவாளால் கோமதியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கோமதியை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சிறுவனை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story