மது விற்றவா் குண்டர் சட்டத்தில் கைது
மது விற்றவா் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, உட்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 42). இவர் கடந்த மாதம் 22-ந்தேதி சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்றபோது மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். குமார் மீது ஏற்கனவே மது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவர் இது போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், அவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்ற கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா குண்டர் சட்டத்தின் கீழ் குமாரை கைது செய்ய உத்தரவிட்டார்.இதையடுத்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் இருந்த குமாரை மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று திருச்சி மத்திய சிறையில் அடைத்து, குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகலை சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.