லாரி டிரைவர் கொலையில் மனைவி, கள்ளக்காதலனுடன் கைது
தூத்துக்குடி அருகே லாரி டிரைவர் கொலையில் மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே லாரி டிரைவர் கொலையில் மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
லாரி டிரைவர்
தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள பேரூரணி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 36). லாரி டிரைவரான இவர், கடந்த 7-ந்தேதி இரவில் தனது வீட்டின் முன்பகுதியில் உள்ள திண்ணையில் படுத்து தூங்கினார். அப்போது அங்கு வந்த மர்மநபர் திடீரென்று கருப்பசாமியை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டார்.
இதுகுறித்து தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர்.
கள்ளக்காதல் விவகாரம்
மேலும் கருப்பசாமியின் மனைவி கனகலட்சுமியின் செல்போன் அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். கருப்பசாமி கொலை செய்யப்பட்ட தினத்தன்று இரவில் கனகலட்சுமி தனது உறவினரான எப்போதும்வென்றான் அருகே உள்ள சோழபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரனிடம் (36) செல்போனில் பேசியது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்காதல் விவகாரத்தில் கருப்பசாமி கொலை செய்யப்பட்ட பரபரப்பு தகவல்கள் வெளியானது.
மனைவி, கள்ளக்காதலனுடன் கைது
அதாவது, கருப்பசாமி அடிக்கடி மது குடித்து விட்டு, மனைவி கனகலட்சுமியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கனகலட்சுமிக்கும், உறவினரான ரவிச்சந்திரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கருப்பசாமியை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர்.
அதன்படி சம்பவத்தன்று கருப்பசாமி வேலைக்கு சென்று விட்டு, இரவில் வீட்டுக்கு திரும்பி வந்தார். பின்னர் அவர், வீட்டின் திண்ணையில் படுத்து தூங்கினார். இதுகுறித்து கனகலட்சுமி செல்போனில் ரவிச்சந்திரனிடம் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த ரவிச்சந்திரன் அரிவாளால் கருப்பசாமியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு, தப்பிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து ரவிச்சந்திரன், கனகலட்சுமி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.