பெரியகாண்டியம்மன் கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சி


பெரியகாண்டியம்மன் கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சி
x

வீரப்பூரில் பெரியகாண்டியம்மன் யானை வாகனத்தில் சென்று அம்பு போட்டார்.

திருச்சி

வீரப்பூரில் பெரியகாண்டியம்மன் யானை வாகனத்தில் சென்று அம்பு போட்டார்.

கன்னிமாரம்மன் கோவில்

மணப்பாறையை அடுத்த வீரப்பூரில் புகழ்பெற்ற பெரியகாண்டியம்மன், சப்தகன்னிமார், பொன்னர் - சங்கர், தங்காள், மத்திரம் காத்த மகாமுனி, மாசி கருப்பண்ணசாமி உள்ளிட்ட தெய்வங்கள் அடங்கிய கன்னிமாரம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் மகாநோன்பு திருவிழா நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. இதையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 9 நாட்கள் கொலுவில் தேனும், தினைமாவும், பயிறு வகைகள் வைத்து நேற்று முன்தினம் இரவு பூஜைகள் நடத்தினர்.

யானை வாகனம்

இதையடுத்து நேற்று மாலை கோவில் வழக்கப்படி வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவில் முன்பிருந்து முரசு கொட்டும் சாம்புவன் காளை முன்னே செல்ல,அதை தொடர்ந்து மேளதாள வாத்தியம், வாணவேடிக்கை முழங்க ஜமீன்தார்கள், பட்டியூர் கிராமங்களில் ஊர் முக்கியஸ்தர்கள் சென்றனர்.

தொடர்ந்து குதிரை வாகனத்தில் குதிரை பூசாரி மாரியப்பன் பொன்னர் தெய்வத்துடன் நின்று வர, அதைத் தொடர்ந்து யானை வாகனத்தில் பெரிய பூசாரி செல்வம் பெரியகாண்டியம்மன் அருகில் கரகப்பூசாரி மணி என்ற வீரமலை தங்காள் கரகம் சுமந்து செல்ல வேடபரி புறப்பட்டு பெரியகாண்டியம்மன் கோவில் எதிர் திசையில் உள்ள தேவரடிக்காடு சென்றது.

அம்புபோடும் நிகழ்ச்சி

யானை வாகனத்தில் இருந்து பெரியகாண்டியம்மன் வாழை மரத்தில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வாழை மரத்தில் அம்பு எய்ததும் தரையில் தண்ணீர் வடிந்து மண் மீது பட்டது. அந்த மண்ணை பக்தர்கள் எடுத்து சென்று வீடுகளில் வைத்து வழிபட்டனர். இதில் வீ.பூசாரிபட்டி மற்றும் சுற்றுவட்டார பட்டியூர் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story