கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாணவ- மாணவி்களுக்கு கலைப்போட்டிகள் 17-ந்தேதி நடக்கிறது


கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாணவ- மாணவி்களுக்கு கலைப்போட்டிகள் 17-ந்தேதி நடக்கிறது
x

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் மாணவ- மாணவிகளுக்கான கலை போட்டிகள் வருகிற 17-ந்தேதி நடைபெறவுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம்

கலை பண்பாட்டு துறை, தமிழ்நாடு அரசு சவகர் சிறுவர் மன்றம் சார்பில் 2022 -2023-ம் நிதியாண்டில் கலைத்துறையில் சிறந்து விளங்குகிற மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 5-8 / 9-12/ 13-16 வயது வகை சிறார்களுக்கிடையே கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் குரலிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம் மற்றும் ஓவியம் ஆகிய நான்கு கலை பிரிவுகளில் மாவட்ட அளவில் கலைப்போட்டிகள் நடத்தி, 9-12 / 13-16 ஆகிய வயது பிரிவில் மாவட்ட அளவில் கலைப்போட்டிகளில் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெறுகின்ற மாணவ- மாணவிகளுக்கு அரசின் சார்பில் பாராட்டு தொகை மற்றும் சான்றிதழ் வழங்கிட நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிட்டுள்ளது.

இந்த போட்டிகள் காஞ்சீபுரம் மாவட்டத்தில், மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகம் (அரசு காதுகோளாதோர் பள்ளி அருகில்) சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சீபுரம் 631 502 என்ற இடத்தில் வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) அன்று மாவட்ட அளவிலான போட்டிகள் காலை 10 மணி முதல் 1 மணிவரை நடைபெறும். குரலிசை போட்டியில் முறையாக இசை பயிலும் சிறார்கள் பங்கு பெறலாம். தமிழில் அமைந்த இசை வடிவங்கள் பாட வேண்டும். பரநாட்டியம் மற்றும் நாட்டுப்புற நடனப் போட்டியில் அதிகபட்சம் 4 நிமிடங்கள் ஆட அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த போட்டியில் சினிமா பாடல்களுக்கான நடனம் மற்றும் குழு நடனம் அனுமதி இல்லை. நாட்டுப்புற நடனப்போட்டியில் நமது பாரம்பரிய கரகம், காவடி, பொய்க்கால் குதிரை, தப்பாட்டம், போன்ற நடனங்கள் மட்டும் ஆடப்பெற வேண்டும். ஓவிய போட்டிக்கு ஓவியத்தாள், வண்ணங்கள் தூரிகைகள் உட்பட தங்களுக்குத் தேவையானவற்றை போட்டியாளர்களே கொண்டு வருதல் வெண்டும். ஓவிய தலைப்புகள் போட்டி தொடங்கும் முன்னர் அறிவிக்கப்படும்.

மேலும் விவரம் வேண்டுவோர் மண்டல உதவி இயக்குனர், கலை பண்பாட்டுத்துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல்,

சின்ன காஞ்சீபுரம் 631 502, தொலை பேசி எண். 044-27269148 அல்லது 8015136911 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த வாய்ப்பினை கலைத்திறன் மிக்க காஞ்சீபுரம் மாவட்ட மாணவ, மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story