பொள்ளாச்சியில் பள்ளி மாணவர்களுக்கு கலை -பண்பாட்டு திருவிழா
பொள்ளாச்சியில் பள்ளி மாணவர்களுக்கு கலை பண்பாட்டு திருவிழா நடைபெற்றது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் பள்ளி மாணவர்களுக்கு கலை பண்பாட்டு திருவிழா நடைபெற்றது.
மணல் சிற்பம்
பொள்ளாச்சி கல்வி மாவட்ட அளவிலான கலை பண்பாட்டு திருவிழா நேற்று மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.
மணல் சிற்பம், களிமண்ணால் விநாயகர் சிலை உள்பட பல்வேறு உருவங்களை மாணவ-மாணவிகள் தத்ரூபமாக வடிவமைத்தனர். மேலும் பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பாரம்பரிய கலைகள்
ஒருங்கிணைந்த பள்ளி, கல்வித்துறை மூலம் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளின் படைப்பாற்றலை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்க வாய்பாட்டிசை, கருவியிலை, நடனம் மற்றும் காட்சி, கலை என்கிற தலைப்புகளில் கலைப்பண்பாட்டு திருவிழா போட்டிகள் கடந்த 2015-2016-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு முதல் நாடகம் (தனிநபர் நடிப்பு) பிரிவு மேலும் போட்டியாக அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த போட்டிகள் மூலம் பள்ளிகள் பாரம்பரிய கலைகளின் பயிற்சி கூடமாக மாறுவதற்கு வழியமைக்கும். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று, அதை தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்வார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கலை பண்பாட்டு விழா குறித்து
முன்கூட்டியே தகவல் தெரிவிக்காத அதிகாரிகள்
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலமாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலை பண்பாட்டு திருவிழா நேற்று நடைபெற்றது. இதுதொடர்பான சுற்றறிக்கை கடந்த 21-ந்தேதி கல்வி மாவட்ட ம் சார்பில் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த சுற்றறிக்கை நேற்று முன்தினம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி, போட்டிகளுக்கு மாணவ-மாணவிகளை தயார்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒரு நாள் கூட காலஅவகாசம் கொடுக்காமல் போட்டிக்கு மாணவ-மாணவிகள் தயாராகுவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். வழக்கமாக போட்டி நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன் சுற்றறிக்கை அனுப்பப்படும். இதன் காரணமாக மாணவ- மாணவிகளுக்கு பாரம்பரிய நடனம் உள்ளிட்ட கலைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு திடீர் அறிவிப்பால் மாணவ-மாணவிகள் எந்த பயிற்சியும் பெறாமல் போட்டிகளில் கலந்துகொண்டனர். தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு முன்பாக தகவல் தெரிந்தால் கூட அந்த விடுமுறை நாட்களில் பயிற்சி அளித்து இருக்க முடியும். எனவே கல்வி அதிகாரிகள் இதுபோன்ற போட்டிகளை நடத்தும் போது முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.