செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி நாளில் கலை நிகழ்ச்சிகள் - மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் அதிகாரி ஆய்வு


செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி நாளில் கலை நிகழ்ச்சிகள் - மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் அதிகாரி ஆய்வு
x

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி நாளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டு மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் அதிகாரி இன்னசென்ட் திவ்யா, இயக்குனர் விக்னேஷ்சிவன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை

மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை மாதம் 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் உலகம் முழுவதிலும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தங்குவதற்கும், அவர்கள் பொழுது போக்குவதற்கும், கலை நிகழ்ச்சிகள் மூலம் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தவும் பல்வேறு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி நாளான ஆகஸ்டு 10-ந்தேதி சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்களை மகிழ்விப்பதற்காக தமிழக அரசு கடற்கரை கோவில் வளாகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. மின் விளக்கு வெளிச்சத்தில் புராதன சின்னங்கள் ஒளிரும் வகையில் திறந்த வெளி மேடையில் சின்னத்திரை, திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், கிராமிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இதற்காக திறந்தவெளி மேடை சினிமா கலை இயக்குனர்களை கொண்டு அமைக்கப்பட உள்ளது.

கடற்கரை கோவில் வளாகத்தில் திறந்த வெளி மேடை அமைப்பதற்காக திரைப்பட இயக்குனர் விக்னேஷ்சிவன், தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனரும், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க, நிறைவு விழாக்குழு தலைவருமான இன்னசென்ட்திவ்யா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது கடற்கரை கோவில் வளாகத்தில் புராதன சின்னத்தை பின்முகப்பாக கொண்டு எந்த பகுதியில் மேடைகள் அமைக்கலாம், வீரர்கள் அமரும் இருக்கைகள் எங்கு அமைக்கலாம் என்பது குறித்து ஒரு மணி நேரம் கடற்கரை கோவில் வளாகத்தில் ஒவ்வொரு பகுதியாக சுற்றிவந்து ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக இயக்குனர் விக்னேஷ்சிவன், அதிகாரி இன்னசென்ட் திவ்யா ஆகியோர் கடற்கரை கோவில் வளாக ஆய்வு பணி காரணமாக புராதன சின்னங்களை கண்டுகளிக்க நுழைவு சீட்டு எடுத்து வந்த சுற்றுலா பயணிகள் 80-க்கும் மேற்பட்டோர் கடற்கரை கோவிலின் நுழைவு வாயிலிலேயே ஒரு மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. ஆய்வுக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.


Next Story