கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்
x

மதுரை நகரில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

மதுரை

மதுரை நகரில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

போட்டி தேர்வு

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மதுரை நகரில் இந்த திட்ட தொடக்க விழா, மதுரை எல்லீஸ் நகரில் நேற்று நடந்தது. கோ.தளபதி எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார், மேயர் இந்திராணி, வெங்கடேசன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை தாங்கி மகளிருக்கு உரிமைத்தொகைக்கான வங்கி பரிவர்த்தனை அட்டைகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைவரும் அரசு திட்டங்களால் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழ்நிலையில் உள்ள மாணவ-மாணவிகளின் தனித்திறமைகளை மெருகேற்றி வேலைவாய்ப்புக்கான போட்டித்தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவும் "நான் முதல்வன் திட்டம்", அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளின் பசியாற்றிடும் "முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம்" போன்ற திட்டங்கள் முதல்-அமைச்சர் சிந்தனையில் உதித்த மகத்தான திட்டங்கள். எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திடும் நோக்கில் இதுபோன்ற இன்னும் ஏராளமான திட்டங்கள் தமிழ்நாடு அரசின் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சிறப்பான திட்டம்

அந்த வரிசையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் "கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்" என்ற மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டம் தலைமுறைக்கும் பயனளிக்கப்போகிற மகத்தான திட்டமாகும். இந்த திட்டத்தின் முழு பெருமையும் முதல்-அமைச்சரையே சாரும். இத்தகைய சிறப்பான திட்டத்தை தொடங்கி வைத்த முதல்-அமைச்சரை இந்த தருணத்தில் வணங்குகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மதுரை வருவாய் கோட்டாட்சியர் சாலினி, துணை மேயர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story