கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப பதிவு முகாம்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்றது. இம்முகாமை கலெக்டர்கள் பழனி, ஷ்ரவன்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து, இவ்வாண்டிற்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடும் செய்துள்ளார்.
அதன்அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்யவும், விண்ணப்ப பதிவு முகாம்கள் சிறப்பாக நடைபெறவும், இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களுக்கு சிறப்பு வல்லுனர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டது. அதோடு, மாவட்டத்தில் உள்ள 1,254 ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் 6,18,445 குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சிறப்பு முகாமின்போது சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.
விண்ணப்ப பதிவு முகாம்
இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில், முதல்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் நேற்று தொடங்கியது. மாவட்டம் முழுவதும் நேற்று 1,027 இடங்களில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்றன.
இம்முகாமில் பெண்கள் பலர் கலந்துகொண்டு, தங்களுடைய வீட்டிற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதனுடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் மின் கட்டண ரசீது ஆகிய விவரங்களையும் இணைத்து கொடுத்தனர். பின்னர் விண்ணப்பங்களை பதிவு செய்து பயோமெட்ரிக் முறையில் குடும்ப தலைவிகளின் கைரேகை பதிவு செய்யப்பட்டு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் போன்ற தகவல்களை உள்ளீடு செய்யப்பட்டன.
கலெக்டர்கள் ஆய்வு
இந்த நிலையில் விழுப்புரம் புதிய நகராட்சி அலுவலகம், காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கீழ்பெரும்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற விண்ணப்ப பதிவு முகாமை மாவட்ட கலெக்டர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் நடைபெறும் விண்ணப்ப பதிவு முகாமானது வருகிற 4-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 3,41,209 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும். அதனை தொடர்ந்து 2-ம் கட்ட முகாம் 5.8.2023 முதல் தொடங்கி 16.8.2023 வரை நடைபெறவுள்ளது.
குடும்ப தலைவிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் முகாமில் கலந்துகொண்டு விண்ணப்பங்களை பதிவு செய்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் ரமேஷ், விழுப்புரம் தாசில்தார் வேல்முருகன், குடிமைப்பொருள் தனி தாசில்தார் தயாளன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கலா, பறக்கும் படை தனி தாசில்தார் செல்வமூர்த்தி, மின் மாவட்ட மேலாளர் பிரவீனா உள்பட பலர் உடனிருந்தனர்.
கள்ளக்குறிச்சி
இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முதல் கட்ட விண்ணப்பப்பதிவு முகாம் நேற்று தொடங்கியது. இதில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 580 இடங்களில் விண்ணப்பபதிவு முகாம்கள் நடைபெற்றன. இ்ந்த முகாமில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, தங்களுடைய வீட்டிற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து கொடுத்தனர். பின்னர் அந்த விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில் சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விண்ணப்பபதிவு முகாமை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கிருந்த இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களிடம், மகளிர் உரிமைத்திட்ட பணிகளை சரியாக விரைந்து மேற்கொள்ள வேண்டும். முக்கியதாக தவறுகள் ஏதும் நடைபெறாமல் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாவட்ட வழங்கல் அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, சின்னசேலம் தாசில்தார் இந்திரா, வருவாய் ஆய்வாளர் உமாமகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் தர்மராஜ், கலைவாணி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.