காங்கயம் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ.15 லட்சத்தில் கணினிகள்


காங்கயம் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ.15 லட்சத்தில்  கணினிகள்
x

மாணவ-மாணவிகளின் கோரிக்கையை ஏற்று காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.15 லட்சத்தில் 35 கணினிகள் வாங்க கணேசமூர்த்தி எம்.பி. ஒப்புதல் வழங்கினார்.

திருப்பூர்

மாணவ-மாணவிகளின் கோரிக்கையை ஏற்று காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.15 லட்சத்தில் 35 கணினிகள் வாங்க கணேசமூர்த்தி எம்.பி. ஒப்புதல் வழங்கினார்.

கலை அறிவியல் கல்லூரி

நத்தக்காடையூர் அருகே உள்ள முள்ளிப்புரம் கிராமத்தில் காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி பட்டப்படிப்பு கல்வி படித்து வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி. நேற்று கல்லூரிக்கு வந்து வகுப்பறைகள், நூலகம், கணினி அறிவியல் துறை ஆய்வகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் சே.ப.நசீம் ஜான் தலைமை தாங்கினார். காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் டி.மகேஷ்குமார், நத்தக்காடையூர் ஊராட்சி மன்ற தலைவர் என்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணினி அறிவியல் துறை தலைவர், பேராசிரியர் கி.ஜெயந்தி அனைவரையும் வரவேற்று பேசினார்.

கூடுதல் அரசு டவுன் பஸ்கள்

தொடர்ந்து கணேசமூர்த்தி எம்.பி., தமிழ் மொழியின் சிறப்புகள், மாண்புகள், தமிழ் மொழியை வளர்ப்பதற்கு பேராசிரியர்கள், மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள், உடல், மனம், நலம் ஆரோக்கியத்துடன் தன்னம்பிக்கையை வளர்க்கும் வழிமுறைகள், எதிர்கால இந்தியாவில் மாணவர்கள் ஆற்ற வேண்டிய பங்கு ஆகியவை பற்றி விளக்கி பேசினார். தொடர்ந்து கல்லூரியில் கணினி அறிவியல் துறை மாணவ, மாணவிகள் சார்பில் கல்லூரி கணினி அறிவியல் துறைக்கு புதிதாக 50 கணினிகள் வழங்க வேண்டும் என்றும், கல்லூரிக்கு கூடுதல் அரசு டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என்றும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதனை பெற்று கொண்ட கணேசமூர்த்தி எம்.பி. உடனடியாக 2023-2024 -ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் 35 கணினிகள் கல்லூரிக்கு வழங்க ஒப்புதல் வழங்கினார். மேலும் கல்லூரிக்கு தமிழ்நாடு அரசு, ஈரோடு, திருப்பூர் மாவட்ட கலெக்டர்கள், போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி கல்லூரி பஸ் நிறுத்தம் வழியாக காங்கயம், நத்தக்காடையூர் பகுதிகளுக்கு கூடுதல் அரசு டவுன் பஸ்கள் இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்.

இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் த.ராஜேந்திரன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story