சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா
பொள்ளாச்சி பகுதியில் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதியில் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.
ஆருத்ரா தரிசனம்
பொள்ளாச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று முன்தினம் தொடங்கியது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு சிவகாமியம்மன் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா நேற்று நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பூ பூஜை மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. காலை 9 மணிக்கு பல்லக்கில் வீற்றிருந்த நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோன்று சிவகாமியம்மனும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக சாந்துகுடம் கொண்டு வரப்பட்டு, சாமிக்கு சாத்தப்பட்டது.
திருவீதி உலா
பின்னர் நடராஜரும், சிவகாமியம்மனும் தனி, தனி பல்லக்கில் கோவிலை சுற்றி வந்தனர். தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வீற்றிருக்கும் பட்டி விநாயகரை 11 முறை சுற்றி வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று, மதியம் 1 மணிக்கு நடராஜர் கோவிலை வந்தடைந்தார். இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. முன்னதாக பெண் பக்தர்களுக்கு மஞ்சள் கரடு வழங்கப்பட்டது.
இதற்கிடையில் சாமி திருவீதி உலா செல்லும் வழியில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டு இருந்தது. மேலும் கார், ஆட்டோக்கள் அந்த வழியாக வந்ததாலும், பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டதாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
சுந்தர மகாலிங்கசாமி கோவில்
பொள்ளாச்சி-உடுமலை ரோடு செல்லப்பம்பாளையம் பிரிவில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கசாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து திருவாசகம் முற்றோதல், தேவராட்டம், கும்மியாட்டம் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு முதற்கால வேள்வி பூஜையும் நடந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், மகா யாகமும் நடைபெற்றது.
இதை தொடர்ந்து மூலவர், உற்சவர், சுயம்பு மூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும், காலை 8 மணிக்கு 2-ம் கால வேள்வி பூஜைகளும் நடந்தது. காலை 11 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், உலக நலன் வேண்டி சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. விழாவையொட்டி நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சதுரகிரி சுந்தர மகாலிங்கசாமி திருக்கூட அடியார் பெருமக்கள் செய்திருந்தனர்.
அம்மணீஸ்வரர் கோவில்
நெகமம் அருகே தேவணாம்பாளையத்தில் உள்ள அம்மணீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதையொட்டி கோ மாதா பூஜை, திருக்கல்யாணம், ஆருத்ரா தரிசனம், சுவாமி ஊர்வலம் ஆகியன நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.