சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்


சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்
x

சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

பெரம்பலூர்

ஆருத்ரா தரிசனம்

பெரம்பலூரில் உள்ள பிரசித்தி பெற்ற அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீசுவரர் கோவிலில் 40-வது ஆண்டு திருவாதிரை திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி 2 நாட்கள் விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளை திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் முன்னிலையில் கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர் நடத்தினார். நள்ளிரவில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி-அம்பாளை தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை நடராஜ பெருமான்- சிவகாமி அம்பாள் உற்சவ சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஆருத்ரா தரிசன உற்சவமும், மகாதீபாராதனையும் நடந்தது. சிறப்பு பூஜை மற்றும் வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து நடராஜபெருமான் மற்றும் சிவகாமி அம்பாள் திருமேனிகள் சப்பரத்தில் வைக்கப்பட்டு, எடத்தெரு, செக்கடித்தெரு, பெரியதெற்குத்தெரு, கடைவீதி வழியாக ஆருத்ரா தரிசன காட்சி, சுவாமி திருவீதி உலா நடந்தது. திருவாதிரை விழாவிற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் நகர சோழிய வேளாளர் சமூகத்தினர் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

திருக்கல்யாண உற்சவம்

பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தினி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் திருவாதிரை விழா மற்றும் ஆருத்ரா தரிசன விழா நேற்று முன்தினம் தொடங்கி 2 நாட்கள் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை பஞ்சமூர்த்தி, அம்பாள், சுப்ரமணியர், விநாயகர், சண்டிகேசுவரர், சோமாஸ்கந்தருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் மற்றும் மகாதீபாராதனையும் நடந்தது. மாலையில் பஞ்சநதீஸ்வரர்- தர்மசம்வர்தினி அம்பாளுக்கு 8-வது ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

இதில் குரும்பலூர், பாளையம், ஈச்சம்பட்டி, செஞ்சேரி, மேட்டாங்காடு, அம்மாபாளையம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருவாதிரை திருவிழாவின் முக்கிய அம்சமான ஆருத்ரா தரிசன உற்சவ நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் மூலவர், அம்பாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சோடச அபிஷேகங்களும், மாலையில் நடராஜர்-சிவகாமி அம்பாள் ஆருத்ரா தரிசன காட்சி திருவீதி உலாவும் நடந்தது. திருக்கல்யாணம் மற்றும் ஆருத்ரா தரிசன சிறப்பு உற்சவத்தை கோவில் அர்ச்சகர் சிவசுப்ரமணியம் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர்.

திரளான பக்தர்கள் வழிபாடு

இதேபோல் வாலிகண்டபுரத்தில் உள்ள வாலீஸ்வரர் கோவிலில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு நேற்று காலை பல்வேறு வாசனை பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் மதியம் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அவர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதேபோல் வெங்கனூர் விருத்தாசலேஸ்வரர் கோவிலில் சிவகாம சுந்தரி உடனுறை நடராஜபெருமானுக்கு ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.

மேலும் செட்டிகுளத்தில் உள்ள குபேர தலமான காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேசுவரர் கோவிலில் சிவகாம சுந்தரி, நடராஜர் சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இரவில் சுவாமி வீதி உலா நடந்தது. சு.ஆடுதுறை குற்றம்பொறுத்த ஈஸ்வரர் (அபராதரட்சகர்) கோவில், துறைமங்கலத்தில் உள்ள சொக்கநாதர் உடனுறை மீனாட்சி கோவில், எசனையில் உள்ள ஞானாம்பிகை சமேத காலத்தீஸ்வரர் கோவில், அம்மாபாளையம் அருணாசலேஸ்வரர் கோவில், நக்கசேலம் துவாரகாபுரீஸ்வரர் கோவில், வி.களத்தூர் விஸ்வநாதசுவாமி கோவில், குன்னம் ஆதிகும்பேஸ்வரர் கோவில், வேப்பூர் அருணாசலேஸ்வரர் கோவில், திருவாலந்துறை சோழீஸ்வரர் கோவில், தொண்டமாந்துறை காசிவிஸ்வநாதர் கோவில், வெங்கலம் தாராபுரீஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் திருவாதிரை விழா விமரிசையாக நடந்தது. பெரம்பலூரை அடுத்த எளம்பலூரில் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் உள்ள நளினாம்பிகை சமேத காகன்னை ஈஸ்வரர் கோவிலில் திருவாதிரை விழாவையொட்டி சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடந்தது.


Next Story