அரும்பாக்கத்தில் வீடுபுகுந்து துணிகரம்: ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டரின் மனைவியை கட்டிப்போட்டு 40 பவுன் நகை கொள்ளை


அரும்பாக்கத்தில் வீடுபுகுந்து துணிகரம்: ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டரின் மனைவியை கட்டிப்போட்டு 40 பவுன் நகை கொள்ளை
x

சென்னை அரும்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டரின் மனைவியை கட்டிப்போட்டு 40 பவுன், பணத்தை கொள்ளையடித்தவர்கள், நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டிச்சென்றனர்.

சென்னை

சென்னை அரும்பாக்கம், அம்பேத்கர் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் கங்கா (வயது 70). இவர், ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டரின் மனைவி ஆவார். கணவர் இறந்து விட்டதால் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு மகாதேவன் என்ற ஒரு மகன் உள்ளார். அவர், திருமணமாகி தனது குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு கங்கா வீட்டுக்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், வீடு வாடகைக்கு உள்ளதா? என கேட்டனர். கதவை பாதி திறந்த நிலையில் கங்கா பதில் சொல்லி கொண்டிருந்தார்.

மர்ம நபர்கள் கங்காவிடம் பேசியபடியே திடீரென கதவை திறந்து கொண்டு அதிரடியாக வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் கங்காவை கத்தியை காட்டி மிரட்டி அவரது கை, கால்களை கட்டிப்போட்டனர்.

பின்னர் வீட்டின் பீரோவில் இருந்த 40 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். மேலும் கங்காவின் கையை கத்தியால் வெட்டிய மர்மநபர்கள், மூதாட்டி என்றும் பாராமல் அவரை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்தனர்.

இதுபற்றி போலீசில் புகார் செய்தால் அந்த புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பரப்பி விடுவோம் என மிரட்டிவிட்டு தப்பிச்சென்றனர். அவர்கள் சென்ற பிறகு கங்கா கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் கங்கா கட்டிப்போட்ட நிலையில், ஆடையின்றி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் கொள்ளையர்கள் கத்தியால் வெட்டியதில் கை விரலில் ஏற்பட்ட காயத்துக்காக கங்காவை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். பின்னர் இதுகுறித்து அரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.

இதுபற்றி அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கங்காவின் மகன் மகாதேவன், தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதற்காக பலரிடம் அவர் கடன் வாங்கி உள்ளார். மேலும் அவர் நடத்தி வரும் நிறுவனத்தில் தொழில் போட்டி இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் அவருடைய மகனை தேடி வந்து அவர் வீட்டில் இல்லாததால் கங்காவை வீடு புகுந்து கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு, அவரை அவமானப்படுத்தி சென்றார்களா? அல்லது தொழில் போட்டி காரணமா? என்ற கோணத்தில் அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story