பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு


பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு
x
திருப்பூர்

உடுமலை பகுதியில் பெய்துவரும் பலத்த மழையால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வெள்ளம் சூழ்ந்தது.

பஞ்சலிங்க அருவி

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 950 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது.

அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக நிலவிய வெப்பத்தின் தாக்குதல் காரணமாக அருவியில் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து விட்டது.

கோவிலை வெள்ளம் சூழ்ந்தது

இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர். இந்த சூழலில் நேற்று மாலை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக இரவு 8 மணியளவில் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர் அடிவாரப் பகுதியில் உள்ள மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள கோவிலை தழுவியவாறு திருமூர்த்தி அணையை அடைந்தது.

அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் கண்காணித்து வருகிறார்கள். இதே போன்று உடுமலை, தளி, அமராவதி சுற்று வட்டார பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் கருகும் நிலையில் இருந்த பயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளது. மேலும் வயல்வெளிகளும் உழவுக்கு ஏற்ற வகையில் தயாராக கூடிய சூழல் நிலவுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story