பா.ஜ.க.வோடு கூட்டணியில் இருக்கும் வரை வெற்றி பெற முடியாது


பா.ஜ.க.வோடு கூட்டணியில் இருக்கும் வரை வெற்றி பெற முடியாது
x
தினத்தந்தி 24 Aug 2023 12:15 AM IST (Updated: 24 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. வலிமையான கட்சிதான் ஆனால் பா.ஜ.க.வோடு கூட்டணியில் இருக்கும் வரை அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

ராமநாதபுரம்

அ.தி.மு.க. வலிமையான கட்சிதான் ஆனால் பா.ஜ.க.வோடு கூட்டணியில் இருக்கும் வரை அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

பா.ஜ.க. கூட்டணி

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் ராமநாதபுரம் வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த நாள் மிகவும் முக்கியத்துவமான நாள், இந்தியாவில் உள்ள அனைவருமே பெருமைப்படக்கூடிய நாள், சந்திரயான் நிலவில் வெற்றிகரமாக இறங்கும் என நம்புகிறேன். அ.தி.மு.க. வலிமையான கட்சி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவர்கள் இன்னும் உயிரோட்டமாக தான் இருக்கிறார்கள் என்பதை பலமுறை நிரூபித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இருக்கும் இடம் தான் தவறு.

பா.ஜ.க.வோடு கூட்டணியில் இருக்கும் வரை எந்த தேர்தலிலும் அவர்களால் வெற்றி பெற முடியாது. மாநிலத்தில் இருக்கும் மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு தேர்வு நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. புள்ளி விவரங்களை எடுத்து பார்த்தால் பயிற்சி வகுப்புகளுக்கு செல்பவர்கள் மட்டும்தான் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரிக்கு செல்கிறார்கள்.

தி.மு.க. தலைமையில் வெற்றி

இதற்காக ரூ.93 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இதனை சாமானிய குடும்பத்தால் கட்ட முடியாது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ கல்லூரி சேர்க்கைக்காக காத்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. ஆனால் மருத்துவ கல்லூரி சீட் எண்ணிக்கை 11 ஆயிரமாக மட்டுமே உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மற்ற மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுத வேண்டும். சென்னையில் மாபெரும் கூட்டத்தை நடத்தி, மற்ற மாநில முதல்வர்களுடன் சேர்ந்து அழுத்தம் கொடுத்தால்தான் மத்திய அரசு செவி சாய்க்கும். இல்லையென்றால் அடுத்த ஆண்டு ஆட்சி மாற்றம் வந்தால் கண்டிப்பாக மாற்றம் வரும்.

தமிழ்நாடு மட்டும் இந்த போராட்டத்தில் இருக்கக்கூடாது. மற்ற மாநிலங்களுக்கும் எடுத்து சொல்லி அவர்களும் போராட்டத்தில் இணைய வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி தி.மு.க. தலைமையில் தமிழகத்தில் வெற்றி பெறும். இவ்வாறு கூறினார்.


Next Story