பிளஸ்-1 மாணவர்களுக்கான திறனறி தேர்வை 4,659 பேர் எழுதினர்


பிளஸ்-1 மாணவர்களுக்கான திறனறி தேர்வை 4,659 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 15 Oct 2023 6:45 PM GMT (Updated: 15 Oct 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற பிளஸ்-1 மாணவர்களுக்கான திறனறி தேர்வை 4 ஆயிரத்து 659 பேர் எழுதினர்.

கள்ளக்குறிச்சி

திறனறி தேர்வு

பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல், கணிதம், சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுகின்றனர். அதேபோல் தமிழ் மொழி இலக்கிய திறனையும் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பள்ளி கல்வித்துறை மூலம் பிளஸ்-1 மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு நடத்தி அதன் மூலம் 1,500 மாணவ-மாணவிகளை தேர்வு செய்து மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 வருடங்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இத்தேர்வு மூலம் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதம் அரசுப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

14 மையங்களில்

இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு நேற்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை உள்பட 14 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வை அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த பிளஸ்-1 மாணவ-மாணவிகள் 4 ஆயிரத்து 659 பேர் எழுதினர்.

இத்தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை 2 மணி நேரம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் 10-ம் வகுப்பு நிலையிலான பாடத்திட்ட அடிப்படையில் தேர்வு நடைபெற்றது. கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 அறைகளில் 320 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரும், தொட்டியம் அரசு பள்ளி தலைமை ஆசிரியருமான செல்வி மேற்பார்வையில் தேர்வு நடைபெற்றது.


Next Story