ராமாயணம் சொல்வது போல்லஞ்சம் ஒழிந்து நேர்மையான நிர்வாகம் கிடைத்திட வேண்டும்விழுப்புரத்தில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
ராமாயணம் சொல்வது போன்று லஞ்சம் ஒழிந்து நேர்மையான நிர்வாகம் கிடைத்திட வேண்டும் என்று விழுப்புரத்தில் நடந்த விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
விழுப்புரத்தில் கம்பன் கழகம் சார்பில் 40-வது ஆண்டு கம்பன் விழா நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு ஸ்கார்க் பவுண்டேஷன் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். விழுப்புரம் கம்பன் கழக தலைவர் தனபால் வரவேற்றார். தஞ்சாவூர் தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் மாநில முதன்மை செயலாளர் நெடுஞ்செழியன், 'கம்பனில் கண்ணதாசன்' என்ற தலைப்பில் பேசினார்.
இதில் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கம்பன் விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
அரசு சார்பில் கம்பன் விழாக்கள்
கம்பர் ராம கதையை பாடினார் என்பதற்காக, தமிழை உறக்கப் பேசியவர்கள் கூட கம்பரை சரியாக பேசவில்லை என்ற ஆதங்கம் நமக்கு உண்டு. யார் மறந்தாலும் தமிழை கொண்டாடுபவர்கள் மறக்க மாட்டோம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இந்த விழா நடக்கிறது. ஒரு அரசு எப்படி இருக்க வேண்டும், தனிமனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று கம்பராமாயணம் மூலம் கம்பர் எடுத்துச் சொல்லி இருக்கிறார்.
ராமனைப் பற்றி பாடியதால் தான் என்னவோ தமிழ் என்று பேசும் பலர் கம்பரை கொண்டாடாமல் விட்டுவிட்டார்கள். கம்பருக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.
கம்பன் கழகங்கள் எப்படி கம்பரை போற்றுகிறதோ, அதுபோல் அரசியல் கழகங்களும் கம்பரை போற்ற வேண்டும். அரசு சார்பில் கம்பர் விழாக்கள் நடத்தப்பட வேண்டும்.
தமிழை அழிக்க முடியாது
ஆன்மிகம் இந்த மண்ணோடு சம்பந்தப்பட்டது. புதிய கல்விக் கொள்கையில் ஆரம்பக் கல்வியை தாய் மொழியில் படியுங்கள். அதன் பின்னர் இன்னொரு மொழியையும் படியுங்கள். கம்பர் வடமொழியை கற்று தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்துள்ளார். இன்னொரு மொழி கற்பது என்பது தமிழுக்கு பெருமை.
தமிழை இன்னொரு மொழியால் அழிக்க முடியாது. தமிழ் மொழியால் தான் மற்ற மொழிகள் வளர்கின்றன. தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் சரித்திரங்களை மற்ற மொழிகளும் அறிந்து கொள்ள முடியும்.
ராமனை காட்டுக்கு போக சொன்னாலும் நாடாள சொன்னாலும் அவர் இன் முகத்துடன் ஏற்றுக் கொள்வார். ஆனால் இன்று சிலரது தவறை சுட்டிக்காட்டி சோதனை செய்தால் நெஞ்சு வலி வந்துவிடுகிறது.
கம்பராமாயணம் அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதை கூறுகிறது. ராமாயணம் சொல்வதைப் போல் லஞ்சம் ஒழிந்து நேர்மை நிர்வாகம் நமக்கு கிடைக்க வேண்டும். அப்படி ஒரு அரசு அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.