நெல்லுக்கு ஆதார விலை குவிண்டாலுக்குரூ.500 கூடுதலாக வழங்க வேண்டும்
நெல்லுக்கு ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ.500 கூடுதலாக வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
எடப்பாடி
ஆலோசனை கூட்டம்
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வீரப்பம்பாளையம் தனியார் அரங்கில் பா.ம.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது வாக்குச்சாவடி முகவர்கள் தேர்தலுக்கு முன்பும், தேர்தல் நேரத்திலும் மேற்கொள்ள வேண்டியவை குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பேட்டி
பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த ஆட்சி காலத்தில் மேட்டூர் அணை உபரிரை கொண்டு பாசன திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இதனால் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. எனவே உபரிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அதும் அந்த திட்டத்தை மாவட்டத்தின் கடைகோடியான தலைவாசல் வரை நீட்டிக்க வேண்டும். மேலும் மேட்டூர் உபரி நீரை சரபங்காநதி, வசிஷ்ட நதி, திருமணிமுத்தாறு உள்ளிட்ட நதிகளில் இணைக்க வேண்டும்.
சேலம் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை மூலம், மறுசுழற்சி செய்திட வேண்டும். சேலம் உருக்காலையினை தனியார் மயமாக்கிடும் திட்டத்தினை அரசு கைவிட்டு, ஆலை விரிவாக்கத்திற்காக ஏற்கனவே விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட விளைநிலங்களை மீண்டும் அவர்களிடம் திருப்ப ஒப்படைக்க வேண்டும்.
ஒரே நாடு ஒரே தேர்தல்
மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தினை செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. தற்போது மத்திய அரசு அதற்கான குழுவை மட்டுமே அமைத்துள்ளது. திட்டம் பற்றிய விரிவான அறிக்கை வெளிவந்த பின்னரே பா.ம.க. அதுகுறித்து தனது நிலைப்பாட்டினை தெரிவிக்கும்.
விவசாயிகள் குறித்து எந்த ஒரு அக்கறையும் இல்லாத அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. நெய்வேலி நிர்வாகத்தில் தமிழக அரசு அதிக அக்கறை செலுத்துகிறது. இதனால் தமிழகத்தின் 4-வது பெரிய நெல் உற்பத்தி மண்டலமான கடலூர் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்படும்.
பூரண மதுவிலக்கு
விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு நெல்லுக்கான ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.500 என அரசு நிர்ணயிக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கினை அமல்படுத்திட வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எட்டப்படும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் என கூறினார்.
பேட்டியின் போது எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக், வக்கீல் அண்ணாதுரை, இருப்பாளி ஊராட்சி தலைவர் அலமேலு ஈட்டிகிருஷ்ணன், மாவட்ட தேர்தல் பணிக்குழு செயலாளர் குமார், ஒன்றிய கவுன்சிலர் மாரியம்மாள், எடப்பாடி மேற்கு ஒன்றிய அமைப்பு தலைவர் தம்பிதுரை, வன்னியர் சங்க பொறுப்பாளர் ராமச்சந்திரன், அன்புமணி தம்பிகள் படைத்தலைவர் கிழக்கு ஒன்றியம் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.