தொடர் விடுமுறை முடிந்ததால் சொந்த ஊர்களுக்கு செல்ல கோத்தகிரி பஸ் நிலையத்தில் குவிந்த பயணிகள்
தொடர் விடுமுறை முடிந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கோத்தகிரி பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர்.
கோத்தகிரி
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை விடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறையாக இருந்ததால் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்ததால் ஏராளமான வெளியூர் பயணிகள் அரசு பஸ், சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தனர். மேலும் நீலகிரி மாவட்டத்தில் இருந்து சமவெளிப் பகுதிகளுக்கு சென்று விடுதியில் தங்கிப் படித்து வரும் கல்லூரி மாணவ, மாணவிகளும் விடுமுறை காரணமாக தங்களது சொந்த ஊருக்கு வந்திருந்தனர். இந்தநிலையில் 3 நாட்கள் விடுமுறை முடிந்து சுற்றுலாப் பயணிகள் மீண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவும், மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவும் வேண்டி ஏராளமானோர் கோத்தகிரி பஸ் நிலையத்தில் காத்திருந்தனர்.
வெளியூர் செல்லும் பஸ்களில் அவர்கள் முண்டியடித்து ஏறிச் செல்வதைக் கான முடிந்தது. மேலும் குறைந்த அளவு பஸ்களே இயக்கப் படுவதால் அவர்களில் சிலர் வாடகைக்கு வாகனங்களை எடுத்துச் சென்றனர். மேலும் இது போன்ற தொடர் விடுமுறை காலங்களில் கோத்தகிரியில் இருந்து சமவெளிப் பகுதிகளுக்கு கூடுதல் பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.