ஏரி நிரம்பியதால் உபரிநீருடன் வெளியேறிய மீன்கள்
சூளகிரி அருகே ஏரி நிரம்பியதால் உபரிநீருடன் மீன்கள் வெளியேறியது. மறுகாலில் விழுந்த மீன்களை கிராம மக்கள் போட்டி போட்டு பிடித்து சென்றனர்.
சூளகிரி:-
சூளகிரி அருகே ஏரி நிரம்பியதால் உபரிநீருடன் மீன்கள் வெளியேறியது. மறுகாலில் விழுந்த மீன்களை கிராம மக்கள் போட்டி போட்டு பிடித்து சென்றனர்.
ஏரி நிரம்பியது
கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே அதிகபட்சமாக நேற்று முன்தினம் சூளகிரி பகுதியில் 86 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது. வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். திடீர் கனமழையால் பல்வேறு ஏரிகள் நிரம்பின.
இந்த நிலையில் சூளகிரி அருகே தியாகரசனப்பள்ளி அருகே உள்ள நல்லராலப்பள்ளி ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியது. ஏரி நிரம்பி உபரிநீர் மறுகாலில் வெளியேறியது.
மீன்களை பிடித்த பொதுமக்கள்
ஏரியில் இருந்து உபரிநீருடன் மீன்கள் வெளியேறும் தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. அங்குள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான ஆண்களும், பெண்களும் ஏரிக்கு திரண்டு வந்தனர்.
வேட்டி, சேலை மற்றும் வலைகளை கொண்டு வந்து போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.