சோழவந்தான் அருகே 6 மாவட்ட மக்கள் குவிந்ததால் களை கட்டிய மீன்பிடி திருவிழா-கண்மாயில் மீன்பிடித்து உற்சாகம்


சோழவந்தான் அருகே 6 மாவட்ட மக்கள் குவிந்ததால் களை கட்டிய மீன்பிடி திருவிழா-கண்மாயில் மீன்பிடித்து உற்சாகம்
x

சோழவந்தான் அருகே முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடித் திருவிழா களைகட்டியது. இதில் 6 மாவட்டத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு மீன்களைப் பிடித்தனர்.

மதுரை

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடித் திருவிழா களைகட்டியது. இதில் 6 மாவட்டத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு மீன்களைப் பிடித்தனர்.

மீன்பிடி திருவிழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் கருப்புகோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள், தங்களது வேண்டுதல் நிறைவேறிய பின்னர் கண்மாயில் மீன் குஞ்சுகளை விட்டுச்செல்வது வழக்கம். அந்த கண்மாயை மீன் ஏலம் விடுவது இல்லை. வருடந்தோறும் 6 மாவட்டங்களில் நடைபெறும் சந்தைகளில் முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெறும் என்று அறிவிப்பார்கள். இதில் 6 மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முதல் நாள் இரவே வந்து, கோவிலில் தங்கி இருப்பார்கள்.

இந்த ஆண்டு மீன்பிடித் திருவிழா நேற்று நடந்தது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து நேற்று முன்தினம் இரவே கருப்பு கோவிலுக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதைதொடர்ந்து பெரியாறு பாசன கூட்டமைப்பு தலைவர் ராமன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மீன்பிடித் திருவிழாவை தொடங்கி வைத்தார்.

போட்டி போட்டு மீன் பிடித்தனர்

ஊராட்சி மன்றத் தலைவர் பூங்கொடிபாண்டி, கருப்பு கோவில் பெரிய கோடாங்கி பொன்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆகியோர் போட்டிப்போட்டு கண்மாயில் இறங்கி மீன் பிடிக்க தொடங்கினர். இதில் 6 மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன் நிறைவேறியவுடன் கண்மாயில் மீன் குஞ்சுகளை விட்டுச் செல்வது வழக்கம். இதை பாதுகாத்து வளர்த்து வருடம் தோறும் மீன்பிடித் திருவிழா நடத்தி வருகிறோம். இந்த திருவிழாவை 6 மாவட்டத்திற்கு தெரிவிப்போம். முதல் நாள் இரவே வெளியூரிலிருந்து மீன் பிடிப்பவர்கள் வந்துவிடுவார்கள். அவர்களுக்கு உணவு, தங்கும் வசதி செய்து கொடுப்போம். இந்த ஆண்டு மீன்பிடி திருவிழா சிறப்பாக நடந்தது. பிடிபட்ட மீன்கள் கிலோ கணக்கில் இருந்தன. சுமாராக ஒரு மீன் 5 கிலோ எடை வரை இருந்தது, என்றனர்.

இதையொட்டி விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், வாலாந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவா உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story