துணை சுகாதார நிலையம் மூடப்பட்டதால் சிகிச்சை பெற சிரமப்படும் கிராம மக்கள்


துணை சுகாதார நிலையம் மூடப்பட்டதால்   சிகிச்சை பெற சிரமப்படும் கிராம மக்கள்
x

நொய்யல் பகுதியில் மூடப்பட்ட துணை சுகாதார நிலையத்தால் சிகிச்சை பெற முடியாமல் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சிகிச்சை பெற தொலைதூரம் செல்லும் அவலநிலையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

துணை சுகாதார நிலையம்

கரூர் மாவட்டம், நொய்யல் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் வேண்டுகோளை ஏற்று கடந்த 1982-ம் ஆண்டு துணை சுகாதார நிலையத்தின் புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. அப்போதைய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் விஜயபாரதி என்பவர் கட்டிடத்தை திறந்து வைத்துள்ளார். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இந்த துணை சுகாதார நிலையத்திற்கு ஒரு செவிலியரை நியமனம் செய்யப்பட்டு, அந்த செவிலியர் அங்கேயே தங்கி இருந்து சுகாதார நிலையத்திற்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் உரிய சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகளை வழங்கி வந்தார்.

கர்ப்பிணிகளுக்கு 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்பட்டு வந்தது. இந்த சுகாதார நிலையத்திற்கு உள்ளூர் பகுதியை சேர்ந்த பொதுமக்களும், அருகாமையில் உள்ள பொதுமக்களும் வந்து சென்றனர். இந்நிலையில் சுகாதார நிலையம் கட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் சுகாதார நிலையம் பழுதடைந்து கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள கான்கிரீட்டுகள் கீழே விழ ஆரம்பித்தது.

விபத்து ஏற்படும் அபாய நிலை

மேலும் ஆங்காங்கே கட்டிடத்தில் வெடிப்புகள் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அச்சத்தில் இருந்த சுகாதார செவிலியர் சுகாதார நிலையத்தில் இருந்த அனைத்து பொருட்களையும் எடுத்து மாற்று இடத்தில் வைத்து விட்டார். இந்நிலையில் சுகாதார நிலையம் மிகவும் சிதிலமடைந்துள்ளதால் எந்த நேரத்திலும் விழுந்து, விபத்து ஏற்படும் அபாயநிலையில் இருந்ததன் காரணமாக அந்த சுகாதார நிலையத்தை பயனற்றதாக ஆக்கிவிட்டனர்.

இதையடுத்து இங்கு பணியாற்றிய சுகாதார செவிலியர் மாற்று இடத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனால் நொய்யல், ஆவுடையார்பாறை, குறுக்குச்சாலை, மரவாபாளையம், மகாத்மா காந்திநகர், அண்ணா நகர், நாடார்புரம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த சுகாதார நிலையத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

பலமுறை புகார்

மேலும் உடல்நிலை சரி இல்லாமல் போனாலும், பல்வேறு சிகிச்சைகளுக்கு செல்வதென்றாலும் இப்பகுதியில் இருந்து வேலாயுதம்பாளையம், ஓலப்பாளையம், சோளக்காளிபாளையம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாற்று சுகாதார நிலையம் கட்டித் தரும்படி சுகாதாரத்துறைக்கு பலமுறை புகார் கடிதம் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் நொய்யல் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் சுமார் 6 கிலோமீட்டருக்கு மேல் உள்ள வேலாயுதம்பாளையம் பகுதிக்கும், ஓலப்பாளையம் பகுதிக்கும் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே சுகாதாரத்துறை மேல் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நொய்யல் பகுதியில் கட்டப்பட்டு பழுதடைந்துள்ள சுகாதார நிலையத்தின் கட்டிடத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடந்து செல்ல வேண்டிய நிலை

இதுகுறித்து நொய்யல் பகுதியை சேர்ந்த மூதாட்டி செல்லம்மாள்(வயது 70) கூறுகையில், நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக இந்த சுகாதார நிலையத்தை பயன்படுத்தி வந்தோம். கடந்த 10 ஆண்டுகளாக இந்த சுகாதார நிலையம் செயல்படாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த நாங்கள் உடல்நிலை சரியில்லை என்றால் வெகு தூரத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் பகுதிக்கும், சோளக்காளிபாளையம் பகுதிக்கும் பஸ் ஏறி செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஓலப்பாளையம் பகுதிக்கு செல்வதற்கு பஸ் வசதி இல்லை சுமார் 7 கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. எனவே அரசு நடவடிக்கை எடுத்து சுகாதார நிலையத்தின் பழைய கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்றார்.

நடவடிக்கை எடுக்கவில்லை

நொய்யல் பகுதியை சேர்ந்த ரத்தினவடிவேல்(52) என்பவர் கூறுகையில், இப்பகுதிக்கு எங்களது முன்னோர்கள் கஷ்டப்பட்டு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை கொண்டு வந்தார்கள். இதில் ஏராளமானோர் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கட்டிடம் பழுதடைந்ததன் காரணமாக செயல்பாட்டை நிறுத்திவிட்டனர். ஆனால் தொடர்ந்து புதிய கட்டிடம் கட்டி செயல்படுத்த நாங்கள் கேட்டும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடம் கட்டிக் கொடுத்து ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை செயல்பட வைக்க வேண்டும் என்றார்.

வேட்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் கூறுகையில், எங்கள் பகுதியில் செயல்பட்டு வந்த துணை சுகாதார நிலையம் சிதிலமடைந்துள்ளது. அதை இடித்துவிட்டு, அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடத்தை கட்டித் தர வேண்டும் என்றார்.

24 மணி நேரமும்

குறுக்குச்சாலையைச் சேர்ந்த மணிவேல் கூறுகையில், பொதுமக்கள், கர்ப்பிணிகள் இந்த சுகாதார நிலையத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். ஆனால் கட்டிடம் சிதிலமடைந்ததால் கட்டிடத்திற்குள் இருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு கட்டிடத்தை பூட்டி சென்று விட்டனர். ஆனால் மீண்டும் புதிய கட்டிடம் கட்ட வேண்டிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடம் கட்டி துணை சுகாதார நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறுக்குச்சாலை பகுதியைச் சேர்ந்த சண்முகம் கூறுகையில், நொய்யல் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட துணை சுகாதார நிலையம் பொதுமக்கள் உள்பட அனைத்து நோயாளிகளுக்கும் பயனுள்ளதாக இருந்தது. 24 மணி நேரமும் அந்த சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. உடல்நிலை சரியில்லை என்றால் இரவு நேரத்தில் எப்பொழுது சென்றாலும் உரிய மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதேபோல் கர்ப்பிணிகள் 24 மணி நேரமும் பிரசவம் பார்த்து வந்தனர். ஆனால் தற்போது அது கனவாக மாறிவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story