நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால்மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து குறைந்ததுமுதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா?


நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால்மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து குறைந்ததுமுதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா?
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:47 PM GMT)

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இதனால் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

தேனி

மஞ்சளாறு அணை

தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை உள்ளது. அணையின் நீர்மட்டம் 57 அடி ஆகும். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து அணைக்கு நீர்வரத்து ஏற்படும். இந்த அணையின் மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 5 ஆயிரத்து 269 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக அக்டோபர் மாதம் 15-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்தது. அதன்பின்னர் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வந்தது.

நீர்வரத்து குறைவு

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியதும் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 53 அடியை எட்டியதும் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 55 அடியை எட்டியதும் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படுகிறது. அதன்படி, கடந்த மாதம் அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியது. அப்போது முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 53 அடியை எட்டியதும் கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டது. அப்போது நீர்வரத்து வினாடிக்கு 117 கன அடியாக இருந்தது.

இந்நிலையில் அதன்பிறகு நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை. இதனால் நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11 கன அடியாக குறைந்தது. நீர் திறப்பு இல்லை. நீர்மட்டமும் 53.65 அடியாக இருந்தது. இதற்கிடையே அணையில் நீர்வரத்து குறைந்து வருவதால் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.


Next Story