கட்டணம் செலுத்தாமல் செல்ல முயன்றதால் தமிழ்புலிகள் கட்சியினர், சுங்கச்சாவடி ஊழியர்கள் வாக்குவாதம்
கட்டணம் செலுத்தாமல் செல்ல முயன்றதால் தமிழ்புலிகள் கட்சியினர், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திருப்புவனம்
சிவகங்கையில் நேற்று சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலியின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. தேனி மாவட்டம் தமிழ்புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அலெக்ஸாண்டர் மற்றும் 7 பேர் சிவகங்கை செல்வதற்காக ஒரு காரில் திருப்பாச்சேத்தி வந்தனர். அங்குள்ள சுங்கச்சாவடியில் அவர்கள் பணம் கட்டாமல் செல்ல முயன்றனராம். அதற்கு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பணத்தை கட்டி விட்டுச் செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். இதையடுத்து காரில் வந்தவர்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.
காரில் வந்த மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர், சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்களை தாக்கியதாக திருப்பாச்சேத்தி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சுங்கச்சாவடி ஊழியர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்றனர். இது குறித்து அறிந்த ஊழியர்களின் உறவினர்கள் பலர் சுங்கச்சாவடியில் பணம் கட்டாமல் தகராறு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து காரில் வந்த 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.