யூடியூப்பில் நிர்வாண படம் : பொய்யான தகவலை சொல்லி இளம்பெண்ணை மிரட்டி பணம் பறித்த ஆசாமி


யூடியூப்பில் நிர்வாண படம்
x

நிர்வாண ‘வீடியோ’ இருப்பதாக மிரட்டி இளம்பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் பணம் பறித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய செல்போன் எண்ணுக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேசுகிறேன் என்று ஒருவர் பேசி உள்ளார். அவர், அந்த இளம்பெண்ணிடம் உங்களுடைய ஆபாச வீடியோ யூடியூப்பில் இருக்கிறது. ரூ.9 ஆயிரம் பணம் கொடுத்தால் அந்த வீடியோவை நீக்கிவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனால் பயந்து போன அந்த இளம்பெண் சப்-இன்ஸ்பெக்டர் என்று பேசியவரின் 'கூகுள் பே' எண்ணுக்கு ரூ.6 ஆயிரத்து 500 பணம் அனுப்பி உள்ளார். பின்னர், அந்த நபர், அந்த பெண்ணின் தந்தையின் செல்போன் எண்ணை வாங்கி அவரிடம் பேசி உள்ளார். அப்போது அவரது மகளை பற்றி தவறாக கருத்துக்களை கூறி, உங்கள் மகளின் நிர்வாண 'வீடியோ' யூடியூப்பில் இருக்கிறது. இந்த வீடியோவை நீக்குவதற்கு ரூ.1 லட்சம் பணம் தர வேண்டும். இல்லையென்றால் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

இதுதொடர்பாக அந்த இளம்பெண் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் சென்றார். தன்னிடம் செல்போனில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பேசி மிரட்டிய தகவலை தெரிவித்தார். பெண் குறிப்பிட்ட பெயரில் யாரும் சப்-இன்ஸ்பெக்டர் இல்லை என்பதும், இந்த இளம்பெண்ணிடம் யாரோ மர்ம நபர் ஒருவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போல் பேசி, நிர்வாண படம் இருப்பதாக பொய்யான தகவலை சொல்லி மிரட்டி பணம் பறித்திருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

1 More update

Next Story