ஆஷா பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்ய கோரி ஆஷா பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊட்டி
ஆஷா ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆஷா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். மாதந்தோறும் ஊதியத்தை குறிப்பிட்ட தேதியில் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஷா ஊழியர் சங்கம் சார்பில், ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் சீதாலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கேசினி ரோஜா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 10 ஆண்டு பணி முடித்த ஆஷா ஊழியர்களுக்கு கிராம சுகாதார செவிலியராக பதவி உயர்வு வழங்க வேண்டும். 2 மணி நேர வேலை என்று அறிவித்து விட்டு, 24 மணி நேரம் வேலை வாங்குவதை நிறுத்த வேண்டும். பணிக்கொடை, இறப்பு பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். போக்குவரத்து படி, புதிய தரமான அலைபேசி வழங்குவதுடன், கைபேசி கட்டணமும் வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி வலியுறுத்தினர். இதில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட தலைவர் சங்கரலிங்கம், பொருளாளர் நவீன் சந்திரன், ஆஷா பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜீவரேகா, பொருளாளர் இந்துமதி, இணை செயலாளர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.