ஊதிய உயர்வு கேட்டு ஆஷா பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஊதிய உயர்வு கேட்டு ஆஷா பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஊதிய உயர்வு கேட்டு ஆஷா பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஆஷா பணியாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஊதிய உயர்வு கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரேகா தலைமை தாங்கினார். பொருளாளர் செல்வாம்மாள் முன்னிலை வகித்தார். ஆஷா பணியாளர்களின் கோரிக்கைகளை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஞானசேகரன், மாவட்ட செயலாளர் ஜெயராமன், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர்கள் முத்துசாமி, தங்கவேல் ஆகியோர் விளக்கி பேசினர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆஷா பணியாளர்கள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறோம். மத்திய-மாநில அரசுகளின் சுகாதார நலத்திட்டங்களை அமல்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை. தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்த சோகை கண்டறிய ரூ.500-ம், கர்ப்பிணியை கண்டறிய ரூ.500-ம் ஆஷா பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் அதற்கான அரசாணை இன்னும் வழங்கப்படவில்லை. மற்ற மாநிலங்களை போல் தமிழக அரசும் எங்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.18 ஆயிரம் வழங்கிட வேண்டும். மேலும் எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களில் சிலர் சென்று கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்து, அதனை தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தினர்.


Next Story