ஆசிய ஆக்கி போட்டிக்கான கோப்பை புதுக்கோட்டை வருகை


ஆசிய ஆக்கி போட்டிக்கான கோப்பை புதுக்கோட்டை வருகை
x

சென்னையில் நடைபெற உள்ள ஆசிய ஆக்கி போட்டிக்கான கோப்பை புதுக்கோட்டை வந்தது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

புதுக்கோட்டை

சென்னையில் 7-வது ஹீரோ ஆசியன் சாம்பியன்ஸ் ஆக்கி போட்டி வருகிற 3-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா, ஜப்பான், கொரியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. இப்போட்டி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த போட்டிக்கான கோப்பை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தமிழகம் வந்தடைந்தது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற நிலையில் திண்டுக்கல்லில் இருந்து நேற்று புதுக்கோட்டை வந்தது. மாவட்ட விளையாட்டரங்கத்தில் இந்த கோப்பை காட்சிப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோப்பையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கலெக்டர் மெர்சி ரம்யா ஆகியோர் காட்சிப்படுத்தினர். நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி பேசுகையில், "இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக சென்னை மாறி வருகிறது. விளையாட்டு துறையில் தி.மு.க. அரசு முத்திரை பதித்து வருகிறது. இந்திய அணியினர் இந்த போட்டியில் சாதிப்பார்கள்'' என்றார். முன்னதாக ஆக்கி வீரர்களுக்கு மரக்கன்றுகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். நிகழ்ச்சியில் முத்துராஜா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் உள்பட வீரர், வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர். கோப்பையை பொதுமக்கள் உள்பட அனைவரும் ஆர்வமுடன் பார்வையிட்டனர். மேலும் அதனை புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தனர். கோப்பை மன்னார்குடி கொண்டு செல்லப்பட்டது. வருகிற 1-ந் தேதி சென்னை சென்றடைகிறது.


Next Story