ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் தாக்கப்பட்ட வழக்கு:புதிய தமிழகம் கட்சி முன்னாள் நிர்வாகிக்கு 4 ஆண்டு சிறை


ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் தாக்கப்பட்ட வழக்கு:புதிய தமிழகம் கட்சி முன்னாள் நிர்வாகிக்கு 4 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 12 Jun 2023 9:20 PM GMT (Updated: 13 Jun 2023 6:26 AM GMT)

ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் தாக்கப்பட்ட வழக்கு: புதிய தமிழகம் கட்சி முன்னாள் நிர்வாகிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சத்தியமங்கலம் கோா்ட்டு தீா்ப்பு கூறியது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் கடந்த 2009-ம் ஆண்டு அன்றைய தி.மு.க. அரசு அருந்ததியர் சமூகத்துக்கு 3 சதவீதம் உள் இடஒதுக்கீடு செய்து அறிவித்தது. இதனை எதிர்த்து புதிய தமிழக கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் கோட்டையை நோக்கி ஊர்வலமாக செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஆதித்தமிழர் பேரவையினர் மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமையில் சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே டாக்டர் கிருஷ்ணசாமியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதுதொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ந் தேதி அன்று சத்தியமங்கலம் போலீசார் 15 பேரை கைது செய்தனர். பின்னர் அனைவரும் அன்று மாலை விடுவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மறுநாள் நவம்பர் 24-ந் தேதி அன்று மதியம் சத்தியமங்கலத்தில் உள்ள ஆதித்தமிழர் பேரவையின் அலுவலகத்துக்கு புதிய தமிழகம் கட்சியின் அப்போதைய மாவட்ட செயலாளர் ஐமன்னன் என்கிற பெரியசாமி தலைமையில் ஒரு கும்பல் புகுந்தது. பின்னர் அங்கிருந்த ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் பொன்னுசாமியை தாக்கி, அலுவலகத்தை சூறையாடி காரில் தப்பி சென்று விட்டார்கள்.

இதுதொடர்பான வழக்கு 2012-ம் ஆண்டு சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி பொன்வேந்தன், புதிய தமிழகம் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளரான ஐமன்னன் என்கிற பெரியசாமிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். மேலும் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரை விடுதலை செய்து தீர்ப்பு கூறினார்.


Next Story