முன்விரோதத்தில் தம்பதி மீது தாக்குதல்


முன்விரோதத்தில் தம்பதி மீது தாக்குதல்
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே தம்பதியை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

கடலூர் அருகே உள்ள அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் அன்புமணி மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 30), டிரைவர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கே.என்.பேட்டையில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. அப்போது கே.என்.பேட்டையை சேர்ந்தவர்களுக்கும், தானம் நகரை சேர்ந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர்.

இந்த முன்விரோதம் காரணமாக தானம் நகரை சேர்ந்த வேல்முருகன் மகன் லெனின் (22), சரவணன் மகன் சரவணகுமார் (23), சரவணன் மனைவி வேல்விழி (41), சதிஷ் மனைவி தேவி (30) உள்பட 6 பேர் நேற்று மதியம் கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு சென்று, திருவிழாவில் தங்களிடம் தகராறில் ஈடுபட்டவர்களை அடையாளம் காட்டும்படி கூறியுள்ளனர். அதற்கு கோபாலகிருஷ்ணன், தனக்கு எதுவும் தெரியாது என கூறினார்.

4 பேர் கைது

இதில் ஆத்திரமடைந்த லெனின் உள்ளிட்ட 6 பேரும் சேர்ந்து கோபாலகிருஷ்ணணை தாக்கினர். இதை தடுக்க முயன்ற அவரது மனைவி பாரதியையும் (26), அவர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து கோபாலகிருஷ்ணன், திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லெனின், சரவணகுமார், வேல்விழி, தேவி ஆகியோரை கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.


Next Story