அண்ணன் மகன் மீது தாக்குதல்; தடுக்க முயன்ற விவசாயிக்கு அரிவாள் வெட்டு
அண்ணன் மகன் மீது தாக்குதலை தடுக்க முயன்ற விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
தாக்கினர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மறவனூர் கிராமத்தை சேர்ந்த இளவரசனின் மகன் கோபி(வயது 20). இளவரசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் சாட்சி கூறியதால், அதே கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் குடும்பத்துடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் செந்தில்குமாரின் மகன் வேல்முருகன்(21) மற்றும் சிலருக்கும், கோபிக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சம்பவத்தன்று வேல்முருகன், பழனியாண்டியின் மகன் அருண், செந்தில்குமாரின் மகன் திருமுருகன், அர்ஜூனின் மகன் பாண்டித்துரை(24) ஆகியோர் கோபியை உருட்டு கட்டைகளாலும், பாட்டில்களாலும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அரிவாள் வெட்டு
இதனை தடுக்க வந்த கோபியின் சித்தப்பாவும், விவசாயியுமான முருகானந்தத்தை(45) தலையில் அரிவாளால் வெட்டியுள்ளனர். மேலும் அவர்களை தடுக்க வந்த கோபியின் பெரியப்பா மகள் பிரியங்கா என்பவரையும் உருட்டு கட்டைகளால் தாக்கியுள்ளனர். அப்போது ஊர் மக்கள் கூடியதால் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதில் பலத்த காயமடைந்த முருகானந்தம் மற்றும் பிரியங்கா ஆகியோர் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்த புகாரின்பேரில் கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகன், திருமுருகன், அருண், பாண்டித்துரை ஆகிய 4 பேரையும் கைது செய்து, அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.