ரூ.10 ஆயிரம் கேட்டு வாலிபர் மீது தாக்குதல்


ரூ.10 ஆயிரம் கேட்டு வாலிபர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 7 Oct 2023 1:00 AM IST (Updated: 7 Oct 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கோவையில், தவற விட்ட செல்போனை ஒப்படைக்க ரூ.10 ஆயிரம் கேட்டு வாலிபரை தாக்கிய 3 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

கோவையில், தவற விட்ட செல்போனை ஒப்படைக்க ரூ.10 ஆயிரம் கேட்டு வாலிபரை தாக்கிய 3 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.

தொலைந்த செல்போன்

கோவை செல்வபுரம் பேரூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரவி பிரகாஷ்(வயது 31). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 4-ந் தேதி இரவு உணவு வாங்க மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றார். அப்போது அவரது செல்போன் தொலைந்து விட்டது.

இதையடுத்து வீட்டுக்கு வந்த அவர், தாயாரின் செல்போனில் இருந்து தனது செல்போனுக்கு அழைத்தார். அதில் எதிர்முனையில் பேசிய நபர், நீங்கள் தவற விட்ட செல்போன் என்னிடம்தான் உள்ளது, அதை திரும்ப ஒப்படைக்க வேண்டுமென்றால் ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. மேலும் செல்போனை வாங்க பூ மார்க்கெட் பகுதிக்கு வர கூறினார்.

3 பேர் கைது

இதையடுத்து ரவி பிரகாஷ் தனது செல்போனை வாங்க பூ மார்க்கெட் பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு 3 திருநங்கைகள் நின்று கொண்டு இருந்தனர். அவர்களிடம் அவரது செல்போன் இருந்தது.

உடனே அவர்களிடம் சென்று ரூ.1,500-ஐ கொடுத்து தனது செல்போனை தருமாறு ரவி பிரகாஷ் கேட்டார். ஆனால் அவர்கள் கூடுதல் தொகை கேட்டதால், திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் திருநங்கைகள் ஆத்திரமடைந்து அந்த செல்போனை சாலையில் வீசியெறிந்ததோடு ரவி பிரகாஷை கற்களால் தாக்கியதாக தெரிகிறது. இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் ரவி பிரகாஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து திருநங்கைகள் 3 பேரை கைது செய்தனர்.


Next Story