விவசாயிகளுக்கு விதைச்சான்று உதவி இயக்குனர் அறிவுரை


விவசாயிகளுக்கு விதைச்சான்று உதவி இயக்குனர் அறிவுரை
x
தினத்தந்தி 7 Jun 2023 6:45 PM GMT (Updated: 7 Jun 2023 6:46 PM GMT)

சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என்று விவசாயிகளுக்கு விழுப்புரம் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் (பொறுப்பு) விஜயா அறிவுரை கூறியுள்ளார்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் (பொறுப்பு) விஜயா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சான்று பெற்ற விதை

விதைச் சான்றளிப்புத்துறையின் மூலம் சான்று செய்யப்பட்ட விதையாக இருப்பின் சான்று விதையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்கள் மரபுத்தன்மை மாறாமல் தரம் வாய்ந்ததாகவும், புறத்தூய்மை, இனத்தூய்மை கொண்டதாகவும் அதிக உற்பத்தி திறன் உடையதாகவும் இருக்கும்.

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தற்போது நெல் பயிருக்கு சொர்ணவாரி பருவமும், மற்ற பயிர்களுக்கு காரீப் பருவமும் நடைபெறுவதால் விவசாயிகள் அனைவரும் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சான்று பெற்ற விதை மூட்டைகளில் விதை உற்பத்தியாளர் அட்டை மற்றும் விதைச் சான்றளிப்புத்துறையின் மூலம் வழங்கப்படும் சான்றட்டை என 2 அட்டைகள் பொருத்தப்பட்டிருக்கும்.

அதிக மகசூல்

இதில் சான்றட்டையில் ரகம், நிலை, விதைச்சான்று எண், பகுப்பாய்வு நாள், காலாவதி நாள் மற்றும் அளவு போன்ற விதை விவரங்கள் அச்சிடப்பட்டிருக்கும். உற்பத்தியாளர் அட்டையில் விதை விவரம், பகுப்பாய்வு விவரங்கள் (புறத்தூய்மை, இனத்தூய்மை, முளைப்புத்திறன், ஈரப்பதம்) அச்சிடப்பட்டிருக்கும். அனைத்து பயிர்களுக்கும் தரமான சான்று, விதையின் இனத்தூய்மை குறைந்தபட்சம் ஆதார நிலை விதைக்கு 99 சதவீதம் இருத்தல் அவசியம். அதேபோன்று சான்று விதைகளின் இனத்தூய்மை குறைந்தபட்சம் 98 சதவீதம் இருத்தல் வேண்டும்.

சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவதால் நல்ல முளைப்புத்திறன், சீரான பயிர் வளர்ச்சி, ஒரே நேரத்தில் அறுவடை மற்றும் கலப்படமில்லாத அதிக மகசூல் பெறலாம். எனவே விவசாயிகள், சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story