திருச்சியில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய துணை போலீஸ் சூப்பிரண்டு கைது
குற்றப்பத்திரிகையில் பெயரை சேர்க்காமல் இருப்பதற்காக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய துணை போலீஸ் சூப்பிரண்டை பெண் ஆவண எழுத்தர் கொடுத்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
குற்றப்பத்திரிகையில் பெயரை சேர்க்காமல் இருப்பதற்காக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய துணை போலீஸ் சூப்பிரண்டை பெண் ஆவண எழுத்தர் கொடுத்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆவண எழுத்தர்
திருச்சி மாவட்டம் பூலாங்குடியை சேர்ந்தவர் சிங்கமுத்து. இவருடைய மனைவி கீதா. ஆவண எழுத்தரான இவர் கடந்த 2019-ம் ஆண்டு திருவெறும்பூரை சேர்ந்த குமார் என்பவருக்கு வீட்டு மனை பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளார்.
ஆனால், அந்த வீட்டுமனை தனக்கு சொந்தமானது என்றும், போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் குமார் அந்த நிலத்தை அபகரித்துவிட்டதாக திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் சுந்தரம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் குமார் உள்பட 8 பேர் மீது கடந்த 2021-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ரூ.1 லட்சம் லஞ்சம்
மேலும் ஆவண எழுத்தர் கீதாவையும் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கிடையே இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த கீதாவை விசாரணைக்காக போலீசார் நேற்று முன்தினம் அழைத்தனர்.
மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக வந்த கீதாவிடம் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் (வயது 53), ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்தால், குற்றப்பத்திரிகையில் உனது பெயரை (கீதா) சேர்க்காமல், வழக்கில் இருந்து விடுவித்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கீதா இதுகுறித்து திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார்.
துணை போலீஸ் சூப்பிரண்டு கைது
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரூ.1 லட்சத்துக்கு ரசாயனம் தடவிய பணத்தை கீதாவிடம் கொடுத்து, அதை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்டிடம் கொடுக்கும்படி கூறினார்கள். இதைத்தொடர்ந்து நேற்று மதியம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு சென்ற கீதா அங்கிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்டிடம் ரூ.1 லட்சத்தை லஞ்சமாக கொடுத்தார். அதை அவர் வாங்கிய நேரத்தில் அங்கு மறைந்து இருந்த திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர்ராணி மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்டை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர், அவருடைய அலுவலக அறை, வாகனம், வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.