ரூ.36 கோடியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
கருணாநிதி நூற்றாண்டு விழாவினையொட்டி திருவள்ளூரில் ரூ.36 கோடியில் 912 பயனாளிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில், கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பல்வேறு துறைகள் சார்பாக 912 பயனாளிகளுக்கு ரூ.35.83 கோடியிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இதையடுத்து பல்வேறு துறைகள் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
ஆய்வு கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
முதல்-அமைச்சரின் முகவரியில் தரப்படும் மனுக்களுக்கு தரமான பதில்கள் தருவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மக்கள் தங்கள் கோரிக்கைகளை, குறைகளை மனுக்கள் மூலமாகத்தான் தெரிவிப்பார்கள். இந்த மனுக்களின் மீது குறித்த காலத்துக்குள் பதில் அளிக்கவேண்டும். குறிப்பாக ஏழை-எளிய மக்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆகியோர் தரும் மனுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பதில் அளிக்கவேண்டும்.
கும்மிடிப்பூண்டியில் இடம் தேர்வு செய்து உழவர் சந்தை அமைக்கவேண்டும். முதல்-அமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு மிகச்சிறப்பான மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்களை மக்களிடம் எடுத்துச்சென்று அரசுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக இருந்து அரசுக்கு, அரசு அலுவலர்கள் நற்பெயர் பெற்றுத்தரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் கரிகலவாக்கம் பகுதியில் தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சார்பாக சென்னை எல்லை சாலை திட்டத்தின் கீழ், தச்சூர் முதல் திருவள்ளூர் புறவழி சாலை வரை ரூ.1,540 கோடியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இந்த சாலை பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்வுகளில், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அரசு செயலாளர் தாரேஷ் அகமது, மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடி போலீஸ் கமிஷனர் கே.சங்கர், அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி.யான எஸ்.ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர் சா.மு.நாசர் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.