தி.மு.க. ஆட்சி அமைந்து ஓராண்டுக்குள் 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது-ஓசூரில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேச்சு


தி.மு.க. ஆட்சி அமைந்து ஓராண்டுக்குள் 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது-ஓசூரில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேச்சு
x

தி.மு.க. ஆட்சி அமைந்து ஓராண்டுக்குள் 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று ஓசூரில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

தி.மு.க. ஆட்சி அமைந்து ஓராண்டுக்குள் 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று ஓசூரில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.

வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை இணைந்து தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை ஓசூரில் நேற்று நடத்தின. ஓசூர் மிடுகரபள்ளியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த முகாமிற்கு, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.

வேலை வாய்ப்புத்துறை இணை இயக்குனர் லதா வரவேற்றார். இதில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, முகாமை தொடங்கி வைத்து வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கி பேசினார்.

75 ஆயிரம் பேருக்கு வேலை

அப்போது அவர் பேசியதாவது:- தி.மு.க. ஆட்சி அமைந்து ஓராண்டுக்குள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, 57 பெரிய முகாம்கள் உள்பட 606 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இந்த ஆட்சி தி.மு.க.விற்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்களுக்கான ஆட்சியாகும். முதல்-அமைச்சர் அடிக்கடி சொல்வதைப்போல, இது மக்களுக்கான ஆட்சி.

தி.மு.க.விற்கு வாக்களித்தவர்கள் பெருமைப்படும் வகையிலும், வாக்களிக்காதவர்கள், நாம் வாக்களிக்க தவறிவிட்டோமோ? என்று வருத்தப்படும் வகையிலும் இந்த ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை தேடித்தந்த தமிழக மக்கள், உள்ளாட்சி தேர்தல்களிலும் 100 சதவீத வெற்றியைதந்துள்ளனர்.

இளைஞர்கள் படித்து முடித்ததும், தங்கள் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வகையில் வேலைவாய்ப்புத்துறை சார்பில், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இளைஞர்கள் இதனை பயன்படுத்தி கொண்டு தனித்திறனை வளர்த்து எதிர்காலத்தில் தங்கள் திறமைக்கேற்ப நல்ல நிறுவனங்களில் பணிபுரிய வேண்டும். அனைவரது கூட்டுமுயற்சியாலும், இந்த வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.

அமைச்சர்கள்

தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. டாக்டர் செல்லகுமார், தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன்ஆகியோர் விழாவில்பேசினார்கள்.

பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன், ஓசூர் துணை மேயர் ஆனந்தய்யா, மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி.முருகன், செங்குட்டுவன், முன்னாள் எம்.பி.சுகவனம், துறை இயக்குனர் வீரராகவராவ், ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் ஓசூர் டைட்டான், டி.வி.எஸ். உள்பட 262 நிறுவனங்கள் கலந்துகொண்டன. 16 ஆயிரத்து 151 பணி தேடுவோர் கலந்து கொண்டனர். இவர்களில் 3 ஆயிரத்து 526 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. முடிவில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் நன்றி கூறினார்.


Next Story