செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மீண்டும் தொடங்கியது-விவசாயிகள் மகிழ்ச்சி
செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மீண்டும் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சுல்தான்பேட்டை
செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மீண்டும் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொப்பரை தேங்காய் கொள்முதல்
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் தென்னை விவசாயம் பிரதான தொழில் ஆகும். இங்கு, 10 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. மரங்களில் பறிக்கப்படும் தேங்காய்கள் மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுநகர், சென்னை உள்பட பல்வேறு ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும். மீதமுள்ள தேங்காய்கள் 100-க்கும் மேற்பட்ட கொப்பரை உற்பத்தி களங்களில் உடைத்து காயப்போட்டு கொப்பரைகளாக மாற்றப்பட்டு அரசு கொள்முதல் மையம் மற்றும் தனியாரிடம் கொப்பரை உற்பத்தி விவசாயிகளால் விற்பனை செய்யப்படுகிறது.
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி கொப்பரை கொள்முதல் தொடங்கியது.
பந்து கொப்பரை கிலோ ரூ.110
அரவை கொப்பரை கிலோ ரூ.105,90-க்கும், பந்து கொப்பரை கிலோ ரூ.110-க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொப்பரை கொள்முதல் கடந்த ஜூலை மாதம் இறுதியில் செஞ்சேரி உள்பட தமிழகத்தில் நிறுத்தப்பட்டது.
காங்கேயம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட வெளிமார்க்கெட்டில் கொள்முதல் கடுமையாக சரிந்துள்ள நிலையில் அரசு கொள்முதல் மையங்களில் கொள்முதல் நிறுத்தம் கொப்பரை உற்பத்தி விவசாயிகளை கவலை அடையச் செய்தது. இதனையடுத்து, விவசாயிகள் தங்களை கடும் நஷ்டத்தில் இருந்து பாதுகாக்க மீண்டும் தமிழக அரசு கொள்முதலை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
30-ந்தேதி வரை நடக்கிறது
இதனையடுத்து அரசு மீண்டும் கொப்பரை கொள்முதல் செய்ய கொள்முதல் மையங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் 30-ந்தேதி வரை கொள்முதல் நடக்கிறது. செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த 29-ந்தேதி முதல் கொப்பரை தேங்காய் கொள்முதல் மேற்பார்வையாளர் இஷாக் தலைமையில் தொடங்கியது.
கொப்பரை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.