சென்னிமலை முருகன் கோவிலில் ரூ.6¾ கோடியில் மலைப்பாதை சீரமைப்பு அமைச்சர்கள் சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன் தகவல்
சென்னிமலை முருகன் கோவிலில் ரூ.6¾ கோடியில் மலைப்பாதை சீரமைக்கப்படும் என்று அமைச்சர்கள் சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன் தகவல் தொிவித்தனா்.
சென்னிமலை முருகன் கோவிலில் ரூ.6¾கோடியில் மலைப்பாதை சீரமைக்கப்படும் என அமைச்சர்கள் சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர்கள்
சென்னிமலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலுக்கு நேற்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் வந்தனர். இவர்களை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் அன்னக்கொடி, கோவில் செயல் அலுவலர் சரவணன் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டனர். உடன் திருச்செங்கோடு தொகுதி ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கே.வி.முரளிதரன், ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் வந்தனர்.
அப்போது அமைச்சர்கள் கூறியதாவது:-
வளர்ச்சி பணிகள்
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பல்வேறு கோவில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த திருப்பணிகளை நிறைவு செய்து கும்பாபிஷேகம் நடத்துவது, ஆகம விதி முறைகளின்படி 12 ஆண்டுகள் கடந்து திருப்பணிகள் செய்யாத கோவில்களில் திருப்பணிகள் செய்வது என்றும், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களில் பழமை மாறாமல் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் முருகன் கோவில்களில் மட்டும் 411 பணிகள் ரூ.730 கோடி மதிப்பில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் பழமை பெற்ற சென்னிமலை சுப்பிரமணியசாமி கோவிலில் ரூ.61 லட்சம் மதிப்பில் புதியதாக வணிக வளாகம், ரூ.93 லட்சம் மதிப்பில் பக்தர்கள் இளைப்பாறும் கூடம் உள்ளிட்ட 24 வளர்ச்சி பணிகள் பக்தர்களின் வசதிக்காக தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்காக கொண்டு வரப்படும்.
மலைப்பாதை சீரமைப்பு பணி
மேலும் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மலை அடிவாரம் முதல் மலைக்கோவில் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள மலைப்பாதை சீரமைக்கும் பணிக்கு ரூ.6 கோடியே 70 லட்சத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடங்க உள்ளது.
இவ்வாறு அமைச்சர்கள் கூறினார்கள்.
அப்போது ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், புலம் பெயர் தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், சென்னிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சி.பிரபு, சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், துணை தலைவர் சவுந்தர்ராஜன் உள்பட பலர் உடன் இருந்தனர்.