தேவகோட்டையில், 22-ந்தேதி கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டம்
குப்பை கொட்ட இடம் கிடைக்காததால் தேவகோட்டையில் 22-ந் தேதி கடையடைப்பு, உண்ணாவிரதம் ேபாராட்டம் நடத்தப்படும் என நகர்மன்ற தலைவர் அறிவித்து உள்ளார்.
தேவகோட்டை
குப்பை கொட்ட இடம் கிடைக்காததால் தேவகோட்டையில் 22-ந் தேதி கடையடைப்பு, உண்ணாவிரதம் ேபாராட்டம் நடத்தப்படும் என நகர்மன்ற தலைவர் அறிவித்து உள்ளார்.
பொதுமக்கள் எதிர்ப்பு
தேவகோட்டை நகராட்சி 27 வார்டுகளில் தினந்தோறும் சேரும் குப்பைகளை தேவகோட்டை நகராட்சி நிர்வாகத்தினர் சேகரித்து தேவகோட்டை ரஸ்தாவில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி வந்தனர். காரைக்குடி நகராட்சி குப்பைகளும் அங்குதான் கொட்டப்படுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு நிதி ஒதுக்கி குப்பை கிடங்கிற்கு இடம் வாங்க நகராட்சிக்கு நிதி அளித்திருந்தனர். நகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் போது அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் இடம் வாங்க முடியாமல் போனது.
இந்நிலையில் அப்போதைய கலெக்டர் ராஜாராமன் காரைக்குடி குப்பை கிடங்கிற்கு அருகில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கினார். பின்னர் அந்த இடத்தில் தேவகோட்டை நகராட்சி குப்பைகள் கொட்டப்பட்டன.
இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு காரைக்குடி நகராட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே அப்பகுதியில் குப்பை கொட்டுவது தடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனால் அப்போதைய கலெக்டர் மதுசூதன் ரெட்டி தேவகோட்டை நகராட்சி குப்பைகளை அப்பகுதியில் கொட்ட காரைக்குடி நகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டார். சில நாட்கள் குப்பைகள் அங்கு கொட்டப்பட்டது. ஆனால் மீண்டும் அங்கு குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
உண்ணாவிரதம்
இதனால் தேவகோட்டை நகராட்சி சுகாதாரத்துறையினர் குப்பைகளை எங்கு கொட்டுவது எனத் தெரியாமல் ஆங்காங்கே கொட்டி வந்தனர். இந்நிலையில் தொடர்ந்து குப்பைகள் அதிகரிக்கும் நிலையில் சேகரிக்கப்பட்ட குப்பைகளுடன் லாரிகள் நகர் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுவதுடன் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் வார்டு கவுன்சிலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின்பு வருகிற 22-ந் தேதி பொதுமக்கள் மற்றும் வர்த்தக சங்கத்தின் ஆதரவுடன் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் அறிவித்து உள்ளார். காரைக்குடி நகராட்சி மற்றும் தேவகோட்டை நகராட்சி ஆகியவற்றின் தலைவர், கவுன்சிலர்கள், அதிகாரிகளை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் ஆகியோரை அழைத்து சமரச கூட்டம் நடத்தி இதற்கு முடிவு காண வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.