ஈரோட்டில்அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக ஜி.கே.வாசன் பிரசாரம்
ஜி.கே.வாசன் பிரசாரம்
அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து, ஈரோடு வெட்டுக்காட்டுவலசு, நாராயண வலசு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, கே.வி.ராமலிங்கம், சி.கே.சரஸ்வதி எம்.எல்.ஏ., த.மா.கா. பொதுச் செயலாளர் விடியல் சேகர் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.
முன்னதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசும்போது கூறியதாவது:-
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றி வருகின்றனர். தாலிக்கு தங்கம், மகளிருக்கான ஸ்கூட்டர், மாணவர்களுக்கான மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அகற்றிவிட்டனர். நீட் தேர்வை அகற்றுவோம் என கூறி, மாணவர்களை ஏமாற்றிவிட்டனர். இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியினரின் அத்துமீறல்கள், தேர்தல் நடத்தை விதிமீறல்களை தேர்தல் ஆணையமும் கண்டு கொள்ளவில்லை. தேர்தல் ஆணையம் நேர்மையுடன் செயல்பட வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு இந்த தேர்தல் மூலம் பாடம் புகட்ட வேண்டும். எனவே நீங்கள் அனைவரும் தவறாமல் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து கே.எஸ்.தென்னரசை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.