ஈரோட்டில் பூஜை பொருட்கள் விற்பனை அமோகம்


ஈரோட்டில் பூஜை பொருட்கள் விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 23 Oct 2023 3:02 AM IST (Updated: 23 Oct 2023 3:02 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது

ஈரோடு

ஈரோட்டில் பூஜை பொருட்கள் அமோகமாக விற்பனையானது.

விற்பனை அமோகம்

ஆயுத பூஜை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள், கடைகள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் போன்ற இடங்களை சுத்தம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். ஈரோட்டிலும் கடந்த 2 நாட்களாகவே பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதேபோல் தனியார் நிறுவன அலுவலகங்களிலும் சுத்தம் செய்யும் பணி நடந்தது. இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைகள், பெட்டிக்கடைகள், டீக்கடைகள் போன்ற சிறிய கடைகளிலும் சுத்தம் செய்யும் பணி நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து வழிபாட்டுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கு தேவையான பூஜை பொருட்கள் விற்பனை ஈரோட்டில் நேற்று அமோகமாக நடந்தது.

பூசணிக்காய்

ஈரோடு ஆர்.கே.வி.ரோடு, மீனாட்சி சுந்தரனார் சாலை (பிரப்ரோடு), சம்பத் நகர், வீரப்பன்சத்திரம் சத்திரோடு, பெரிய வலசு, கொல்லம்பாளையம், நாடார் மேடு, சென்னிமலை ரோடு, பெருந்துறை ரோடு. மணிக்கூண்டு உள்பட பல்வேறு இடங்களில் சாலையோரமாக பூஜை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இதனால் அந்த பகுதிகளில் அதிக அளவில் பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது. சாலையோரங்களில் பூசணிக்காய்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. ஒரு கிலோ பூசணிக்காய் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையானது.

இதேபோல் தேங்காய், எலுமிச்சை பழம், மா இலை, வாழை இலை, வாழை மரக்கன்று, பொரி, வாழைப்பழம் போன்ற பூஜை பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன. வாழை மரக்கன்று ஒரு ஜோடி அதிகபட்சமாக ரூ.50-க்கும், தேங்காய் ஒன்று ரூ.10 முதல் ரூ.20 வரையும், வாழை இலை ஒன்று ரூ.4 முதல் ரூ.8 வரையும் விலை போனது. மா இலை ஒரு கட்டு ரூ.20-க்கு விற்பனையானது. ஆர்.கே.வி. ரோட்டில் விற்பனையான வண்ண கோலப்பொடியையும் மக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.


Next Story