ரெயில் நிலையம் உள்பட முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை
தேனி மாவட்டத்தில் ரெயில் நிலையம் உள்பட முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தேனி மாவட்டத்தில் முக்கிய இடங்களில் போலீசார் நேற்று வெடிகுண்டு கண்டறியும் சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான குழுவினர் தேனி ரெயில் நிலையத்தில் நேற்று மாலையில் சோதனை நடத்தினர். மோப்பநாய் வீரா உதவியுடனும், மெட்டல் டிடெக்டர் கருவிகளை கொண்டும் இந்த சோதனை நடந்தது. ரெயில் பயணிகளின் உடைமைகள், ரெயில் நிலைய வளாகம் மற்றும் வெளிப்புற பகுதி ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
முன்னதாக தேனி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், பெரியகுளம், ஆண்டிப்பட்டி ரெயில் நிலையம், வைகை அணை, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது பொதுமக்கள் கூடும் இடங்களில் கேட்பாரற்று கிடக்கும் பைகள் மற்றும் பொருட்கள் இருந்தால் அவற்றை யாரும் தொடக்கூடாது என்றும், சந்தேகமான முறையில் நடமாடும் நபர்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.