கரட்டுப்பாளையம் கிராமத்தில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு


கரட்டுப்பாளையம் கிராமத்தில்  செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு  மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு
x

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு

ஈரோடு

கரட்டுப்பாளையம் கிராமத்தில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

செல்போன் கோபுரம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். பவானி அருகே உள்ள கரட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

ஆப்பக்கூடல் பேரூராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பாளையம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் உள்ள காலியிடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. செல்போன் கோபுரத்தில் இருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வேறு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

நூதன முறையில்...

ஈரோடு மாவட்ட தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் கொசுவலையை தங்கள் மீது போர்த்திக்கொண்டு நூதனமுறையில் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கொடுத்து இருந்த மனுவில், 'கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 10 கிராம ஊராட்சிகளில் ஒரு ஊராட்சிக்கு ஒருவர் வீதம் 10 ஊழியர்கள் கடந்த பல ஆண்டுகளாக டெங்கு மஸ்தூர் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு நாளொன்றுக்கு ஊதியமாக ரூ.312 வழங்க வேண்டும். ஆனால் ஊராட்சி நிர்வாகங்கள் ரூ.212 மட்டுமே வழங்கி வருகிறது. அரசு அறிவித்தபடி மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப ஊழியர்கள் நியமிக்கப்படாததால் பணிச்சுமை அதிகரித்து வருகிறது. மாதந்தோறும் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

வீடுகளை அகற்றக்கூடாது

பவானி பழனிபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், 'பவானி பழனிபுரம் முதலாவது வீதியில் ஆற்றங்கரை ஓரமாக 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 70 ஆண்டுக்கு மேலாக வசித்து வருகிறோம். எங்களால் பிற மக்களுக்கும், ஆற்றுக்கும் எந்தவித இடையூறும் இல்லை.

தற்போது பொதுப்பணித்துறை மூலம் நோட்டீஸ் வழங்கி, எங்கள் வீடுகளை காலி செய்து கொள்ளும்படியும், அந்தவீடுகளை அகற்ற உள்ளதாவும் தெரிவித்துள்ளனர். எங்களுக்கு வேறு வீடு, நிலம் இல்லை. எங்களது வாழ்வாதாரம் இந்தபகுதியில் உள்ளதால், வேறு இடம் சென்று பிழைப்புக்கு வழி இல்லை. எனவே, எங்களது வீடுகளை அகற்றக்கூடாது' என்று தெரிவித்து இருந்தனர்.

சாம்பிராணி மரம்

தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க தலைவர் வி.பி.குணசேகரன் கொடுத்திருந்த மனுவில், 'பர்கூர் மலை ஆலனை வனப்பகுதியில் வருவாய் தரிசு, நிபந்தனை பட்டா நிலங்களில் 100 ஆண்டு பழமையான அரிய சாம்பிராணி மரங்கள் உள்ளன. அவைகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் பிடுங்கி, பெரிய குழிகள் தோண்டி மூடி வருகின்றனர். 100 ஏக்கர் பரப்பில், செங்குத்தாக உள்ள மலைப்பகுதி நிலங்களில், 15 அடி உயர மண் வெட்டி எடுத்து, சமவெளியாக்கி வருகின்றனர்.

ஆழ்துளை கிணறு அமைத்துள்ளனர். உல்லாச விடுதிகள் அமைக்க அல்லது பணப்பயிர் செய்ய திட்டமிட்டது போல தெரிகிறது. வனத்துக்குள் ஒரு மரம் வெட்ட வேண்டும் என்றாலும், கலெக்டர் தலைமையிலான வனக்குழு முடிவு செய்து அகற்றப்படும். காடழிப்பு செயல்பாட்டுக்கு வனத்துறையும் உடன் போவதை தடுத்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று கூறி இருந்தார்.

பணம் மோசடி

பெருந்துறை ராஜவீதியை சேர்ந்த சசிகலா என்பவர் கொடுத்திருந்த மனுவில், 'நான் பெருந்துறை மருத்துவ கல்லூரியில் கிறிஸ்டல் என்ற தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்கிறேன். எனக்கு செவிலியர் வேலை வாங்கி தருவதாக கூறி ஒருவர் ரூ.16 ஆயிரத்து 500 மோசடி செய்துவிட்டார். எனவே அவர்மீது நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை மீட்டுத்தரவேண்டும்' என்று கூறி இருந்தார்.

இதபோல் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 178 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி, அதை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் பயிற்சி கலெக்டர் பொன்மணி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

1 More update

Next Story